சஸ்பெண்ட் செய்ய வைத்தவரை கொன்ற வழக்கில் போலீஸ்காரர் உட்பட 6 பேர் கைது


திருமலை: தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் வெங்கடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாய்பிரகாஷ் (30), தொண்டு நிறுவனர். இவர் கடந்த 15ம்தேதி காரில் வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. போலீஸ் விசாரணை யில் அவரது செல்போன் நெட்வொர்க் கடைசியாக ஆந்திராவின் பாலகொல்லு பகுதியில் சுவிட்ச் ஆப் ஆனது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே கடந்த 17ம் தேதி ஹுஸ்னாபாத் அருகே உள்ள ஒரு விவசாய கிணற்றில் சாய்பிரகாஷ் சடலமாக மிதந்தது தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதனிடையே சாய்பிரகாஷின் தங்கை உறவு முறையான நிர்மலா(25) என்பவருக்கும் வெங்கடபுரம் போலீஸ் நிலைய போலீஸ்காரர் ஸ்ரீனிவாஸ் என்பவருக்கும் தகாத உறவு இருந்ததும், இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் சாய்பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் போலீஸ் உயரதிகாரிகள், ஸ்ரீனிவாசை சஸ்பெண்ட் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ஸ்ரீனிவாசிடம் விசாரித்தனர். விசாரணையில், தகாத உறவு விவகாரம் காரணமாக தன்னை சஸ்பெண்ட் செய்ய வைத்த ஆத்திரத்தில் கடந்த 15ம்தேதி கூலிப்படையை ஏவி சாய்பிரகாஷை கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஸ்ரீனிவாஸ், நிர்மலா மற்றும் கூலிப்படையை சேர்ந்த4 பேரை கைது செய்தனர்.

The post சஸ்பெண்ட் செய்ய வைத்தவரை கொன்ற வழக்கில் போலீஸ்காரர் உட்பட 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: