அத்தியாவசிய திட்டங்களை உடனே செயல்படுத்தக்கோரி ஸ்ரீபெரும்புதூரில் 28ம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அத்தியாவசிய திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி வரும் 28ம் தேதி அதிமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக எடப்பாடி அறிவித்துள்ளார். இதுகுறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி வாழ் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை அமைப்பதற்காக, கடந்த ஆட்சியில் அதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக, இதுநாள் வரையிலும், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதற்கான எந்த ஒரு பணியும் மேற்கொள்ளப்படவில்லை.

நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் வசித்து வரும் மக்களுக்கு முறையாக மின்சாரம் வழங்கப்படுவதில்லை. அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படுவதால், கோடை காலமாக உள்ள தற்போதைய நிலையில், மக்கள் சொல்லொண்ணா அவதியுறுகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி வாழ் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாததோடு, அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டுள்ள அரசையும், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும்; மக்கள் நலனை கருத்தில் கொண்டு அத்தியாவசிய திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தியும், அதிமுக காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில், 28.4.2025 (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுகவினர் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

The post அத்தியாவசிய திட்டங்களை உடனே செயல்படுத்தக்கோரி ஸ்ரீபெரும்புதூரில் 28ம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: