திருச்சி, ஏப்.23: திருச்சி நாடாளுமன்றத் உறுப்பினர் துரை வைகோ நேற்று திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரயில்வே துறை தொடர்பான வரவிருக்கும் திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளுகள் தொடர்பாக நேற்று ஆய்வுகளை மேற்கொண்டார். அதில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள இரயில்வே லெவல் கிராசிங் இடங்களில் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக, வரவிருக்கும் திட்டங்களுக்கு தேவையான பணிகள் மற்றும் அதில் உள்ள சவால்கள், சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடைபெறவுள்ள ரயில்வே துறையின் வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக எடுத்துரைத்து, மேம்பாலக் கட்டுமானத் திட்டம் விரைவில் தொடங்கப்படவும், புதிய கோரிக்கைகளை முன்வைப்பதற்காகவும் நான்கு இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே ஒன்றிய அமைச்சரைச் சந்தித்தும், அதிகாரிகளைத் தொடர்பு கொண்டும் ஒப்புதல் பெறப்பட்ட உடையான்பட்டி, பூங்குடி மற்றும் இனாம்குளத்தூர் ஆகிய இடங்களில் ரயில்வே கிராசிங் மேம்பாலக் கட்டுமான திட்டங்கள் நடைபெற வேண்டிய இடங்களை பார்வையிட்டு, கள ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கு அமையவுள்ள மேம்பால திட்டங்களில் உள்ள சவால்கள் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து, லெவல் கிராசிங் இன்சார்ஜ் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அந்த ரயில்வே லெவல் கிராசிங் பகுதிகளில் ஏற்படும் நெரிசல், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டிகள் ஆகியோருக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்து விவரங்கள் கேட்டறிந்தார். இறுதியாக, புதிய கோரிக்கையான ரங்கம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கக் கோரப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, சுற்றுப்புறப் பகுதிகளைப் பார்வையிட்டார்.
அப்போது, அங்கு வந்திருந்த இரயில்வே துறை பொறியாளர், சுரங்கப்பாதை அமைப்பது சாத்தியமில்லை என்றும், அதற்குப் பதிலாக சிறிய ரக இரயில்வே மேம்பாலம் (Mini ROB) கட்ட முடியும் என்றும் தெரிவித்தார். ஒவ்வொரு பகுதியிலும் ஆய்வுக்குப் பிறகு, பொதுமக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்து ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்து பணிகள் நடைபெற்று வருவதால், தொடர்ந்து இரயில்வே துறை அதிகாரிகளைச் சந்தித்து அழுத்தம் கொடுத்து வருவதையும், விரைவில் மேம்பாலங்கள் அமையும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார். மேலும், திட்டப் பணிகள் தொடங்கும்போது, பகுதி மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நான்கு ரயில்வே மேம்பாலம் திட்டங்களுக்கான ஆய்வில், ரயில்வே துறையின் முதன்மை அதிகாரிகளும், பொறியாளர்களும் உடனிருந்தனர்.
The post சுரங்கப்பாதை அமைக்க சாத்தியம் உள்ளதா? ஸ்ரீரங்கம் பகுதியில் எம்பி துரை வைகோ ஆய்வு appeared first on Dinakaran.