அதிமுக உறுப்பினர் பேசும்போது குறுக்கிட்டு எடப்பாடி பேச முயற்சி: சபாநாயகர் அனுமதி மறுப்பு; அதிமுகவினர் வெளிநடப்பு


எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை ஆகிய மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது, நத்தம் விசுவநாதன் (அதிமுக) பேசியதாவது: கடந்த திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்டனர். மீண்டும் 2001ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழகத்தை மின் வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றினார். (தொடர்ந்து நத்தம் விசுவநாதன் சுமார் 14 நிமிடங்கள் பேசினார். ஆனால் அவர் மிகவும் மெதுவாக பேசியதால் அவர் என்ன பேசினார் என்பது உறுப்பினர்களால் கவனிக்க முடியவில்லை. அதிமுக உறுப்பினர்களே நந்தம் விஸ்வநாதன் என்ன பேசுகிறார் என்பது கேட்கவில்லை. மைக்கை மாற்றி அமைக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு அதிமுகவினர் கோரிக்கை வைத்தனர். சபாநாயகர் அப்பாவும், இன்று மாற்ற முடியாது. நாளை அவரது மைக் உயரமாக மாற்றி அமைக்கப்படும் என்றார்.

அதேநேரம் நந்தம் விசுவநாதன் கொஞ்சம் குனிந்து பேசி இருந்தால் அவர் பேசியது தெளிவாக கேட்டு இருக்கும், ஆனால் அவர் தொடர்ந்து பேசியது யாருக்கும் கேட்கவில்லை). எடப்பாடி பழனிசாமி (எதிர்க்கட்சி தலைவர்): டாஸ்மாக் நிர்வாகத்தில்…. என்று கூறி தொடர்ந்து சில கருத்துக்களை பேச முயன்றார். அப்பாவு (சபாநாயகர்): இது மரபு கிடையாது. ஒரு மானிய கோரிக்கையின் மீது எத்தனை உறுப்பினர்கள் உங்கள் கட்சி சார்பாக பேசுகிறார்கள் என்று கேட்கப்படும். நீங்கள் (அதிமுக) இரண்டு உறுப்பினர்கள் பெயர் கொடுத்துள்ளீர்கள். அவர்கள் தான் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேச வேண்டும். இப்போது நத்தம் விசுவநாதன் பேசி முடித்துவிட்டார். இன்னொரு அதிமுக உறுப்பினர் செந்தில்குமார் பேச இருக்கிறார். அவரிடம் உங்கள் கோரிக்கை கொடுங்கள் அவர் மூலமாக அவையில் பதிவு செய்யப்படும்.

உங்கள் (அதிமுக) உறுப்பினர் ஒருவர் பேசும்போது அதில் குறுக்கிட்டு பேசுவது மரபு இல்லை. நான் அனுமதிக்க முடியாது. துரைமுருகன் (அவை முன்னவர்): நத்தம் விசுவநாதன் அதிமுக அமைச்சராக இருந்தபோது, அந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை இலாகாவை கவனித்தார். அவருக்கு அந்த துறை பற்றி நன்றாக தெரியும். நேரம் இல்லாத நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் என்ன வேண்டும் என்றாலும் குறுக்கிட்டு பேசலாம். ஆனால் மானிய கோரிக்கையின் மீது அவர் கட்சியின் உறுப்பினர் ஒருவர் பேசி கொண்டு இருக்கிறார். அவரது கருத்தை இவர் திடீரென எழுந்து கூற முடியாது. எடப்பாடி பழனிசாமி (எதிர்க்கட்சி தலைவர்): மீண்டும் எழுந்து பேச எழுந்தார். (ஆனால் அவருக்கு மை இணைப்பு கொடுக்கப்படவில்லை. அப்போது அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்க்கட்சி தலைவருக்கு மை இணைப்பு கொடுக்கும்படி வலியுறுத்தினர்).

சபாநாயகர்: இதை அனுதிக்க மாட்டேன். அதிமுக உறுப்பினர்கள் இரண்டு பேரில் யாராவது ஒருவர், இதுபற்றி பேச வேண்டும். நினைத்த நேரத்தில் பேச மற்றவர்களுக்கு அனுமதி அளிக்க முடியாது. அமைச்சர் சிவசங்கர் கூட ஒரு கருத்தை வலியுறுத்தி பேசினார். அவரை கூட நான் தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லை. இதுபோன்று அனுமதிக்க சட்டத்தில் இடம் கிடையாது. (சபாநாயகரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கூச்சல் போட்டனர்).சபாநாயகர்: அதிமுகவினரின் இந்த நடவடிக்கைகளுக்கு நான் பயப்படமாட்ேடன். இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

அதிமுக ஆட்சியில் தான் மின்கட்டணம் 52.09% உயர்வு
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், ‘‘தமிழகத்தில் மின் கட்டண உயர்வு பற்றி அதிமுகவினர் சமூக ஊடகங்களில் தவறான கருத்தை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 37% மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. 2013ம் ஆண்டு 3.5 சதவீதமும், 2014ம் ஆண்டு 16.33% என கடந்த அதிமுக ஆட்சியில் மட்டும் 52.09% மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில் 30% மின்கட்டணம் மட்டுமே உயர்த்தப்பட்டது. தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட மின் திட்டங்களை விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்’’ என்று அதிமுக உறுப்பினர் நத்தம் விசுவநாதனுக்கு பதில் அளித்தார்.

The post அதிமுக உறுப்பினர் பேசும்போது குறுக்கிட்டு எடப்பாடி பேச முயற்சி: சபாநாயகர் அனுமதி மறுப்பு; அதிமுகவினர் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Related Stories: