3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு பைக்கையும் திருடி சென்ற மர்ம கும்பல் வந்தவாசி அருகே நள்ளிரவு துணிகரம்

வந்தவாசி, ஏப். 23: வந்தவாசி அருகே 3 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய மர்ம கும்பல், மற்றொரு வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கையும் திருடி சென்றனர். வந்தவாசி அடுத்த மீசநல்லூர் புதூர் பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன்(50), கூலிதொழிலாளி. நேற்று முன்தினம் இரவு பெரியண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிக்கொண்டு காற்றுக்காக மாடியில் தூங்கினர். நேற்று காலை கீழே இறங்கி வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் அறையில் உள்ள பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. அதில் ைவத்திருந்த 2 சவரன் நகை, ரூ.70 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது. அதேபோல் பக்கத்து தெருவில் வசிக்கும் தனசேகர் என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பைக்கை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர்.

அதே தெருவை சேர்ந்த ெகம்பு என்பவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. அருகே உள்ள பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 1 சவரன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். திருட்டு நடந்த அனைத்து வீடுகளிலும் நள்ளிரவு ஒரே கும்பல்தான் கைவரிசை காட்டியிருக்கும் என தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் தெள்ளார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, பாபு மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடவியல் நிபுணர் சதிஷ் தலைமையிலான குழுவினர் தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் மியா வரவழைக்கப்பட்டடு ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். ஒரே நாளில் 4 வீடுகளில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரவுநேரத்தில் போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு பைக்கையும் திருடி சென்ற மர்ம கும்பல் வந்தவாசி அருகே நள்ளிரவு துணிகரம் appeared first on Dinakaran.

Related Stories: