பெரம்பலூர் : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள் திட்டப் பணிகளை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று எளம்பலூர் கிராம பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று (திங்கட்கிழமை) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தார். கூட்டத்தில் பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :
நாங்கள் எளம்பலூர் கிராமத்தில் வசித்து வருகிறோம். கடந்த 6 மாதத்திற்கு முன் எங்களது ஊராட்சியை பெரம்பலூர் நகராட்சியோடு இணைக்கப் போவதாக தகவல் தெரிந்து பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆர்ப்பாட்டம் செய்து எங்கள் ஊராட்சியை பெரம்பலூர் நகராட்சியோடு இணைக்க வேண்டாம் என கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும், 100 நாள் வேலைப் பணியை எளம்பலூர் ஊராட்சிக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொண்டோம்.
அப்பொழுது கட்டாயமாக உங்கள் ஊராட்சிக்கு 100 நாள் வேலை பணிகள் நிரந்தரமாக நடக்கும் என மாவட்ட கலெக்டர் அறிவித்தார். தற்போது பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றபோது எளம்பலூர் ஊராட்சி பெரம்பலூர் நகராட்சியோடு இணைக்கப்பட்டு விட்டது.
அதனால் 100 நாள் வேலை திட்டம் இனி நிரந்தரமாக இல்லை என அறிவித்து விட்டனர். மேலும் 100 நாள் வேலைக்கான சம்பளம் கடந்த ஆறு மாதமாக எங்களது கணக்கிற்கு ஏறவில்லை. இந்த சூழ்நிலையில் சாதாரண கூலி தொழிலாக நாங்கள் எவ்வாறு எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.
எனவே எளம்பலூர் ஊராட்சி பொதுமக்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலை கண்டிப்பாக வழங்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
The post எளம்பலூர் ஊராட்சிக்கு 100 நாள் வேலை திட்ட பணிகளை வழங்க வேண்டும் appeared first on Dinakaran.