புதுச்சேரி : புதுச்சேரி வினோபா நகரை சேர்ந்தவர் வசந்தராமன் (22) என்பவர் கடந்த 15ம் தேதி கிழக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஜீரோ எப்ஐஆர் பதியப்பட்டது. பிறகு இந்த வழக்கு பெரியகடை காவல் நிலையத்திற்கு மேல் விசாரணைக்காக மாற்றம் செய்யபட்டது.
பிறகு இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் வசந்தராமன் மிஷின் வீதியில் உள்ள தனியார் ரெஸ்டோபாரில் பவுன்சராக வேலை செய்து வருவதாகவும், பப்பிற்கு கடந்த 14ம் தேதி அதிகாலை 5 நபர்கள் வந்து செல்போனுக்கு சார்ஜர் கேட்டு குடிபோதையில் பிரச்சனை செய்தது தெரியவந்தது.
அப்போது அங்கு பணியிலிருந்த பவுன்சர்கள் சமாதனபடுத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்ததால் ஆத்திரம் அடைந்த நபர்கள் அவர்கள் ஓட்டி வந்த காரை பவுன்சர் மீது மோதி கொலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தோடு காத்திருந்துள்ளனர்.
அப்போது வசந்தராமன் பணி முடிந்து புதுவை பெருமாள் கோயில் வீதி வழியாக அவரது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவர்கள் பின் தொடர்ந்து வந்து வசந்தராமன் பைக் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளனர் என்பது தெரியவந்தது.
இதயைடுத்து இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய புதுவை காவல் துறை சீனியர் எஸ்பி கலைவாணன் உத்தரவின்பேரில் எஸ்பி (கிழக்கு) ரகுநாயகம் வழிகாட்டலின் பேரில் பெரியகடை காவல் நிலைய ஆய்வாளர் ஜெய்சங்கர் தலைமையில் முருகன் உதவி ஆய்வாளர், கிரைம் டீம் எஸ்பி (கிழக்கு), பெரியகடை காவல் நிலைய கிரைம் டீம் உள்ளடங்கிய தனிபடை அமைத்து விசாரித்தனர். பிறகு சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
அதன்படி அவர்கள் தமிழ்நாடு கன்னியாகுமரி எடைக்காடு பகுதியை சேர்ந்த ஸ்டார்வின் (29), சென்னை ராமாபுரம், திருமணை நகரை சேர்ந்த சுதாகார் (35), கன்னியாகுமரி, செம்மன்காலை பகுதியை சேர்ந்த சிபின் (32), ராஜஸ்தான் சேர்ந்த அபிஷேக், ராகுல், ராஜஸ்தான் ஆகியோர்கள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் ஸ்டார்வின் (29), சுதாகார் (35), சிபின் (32) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 14ம் தேதி இரவு பப் ஒன்றில் இவர்களுக்கும் பவுன்சர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒரு பவுன்சரை கார் ஏற்றி அவர்கள் கொலை செய்ய முயற்சி செய்தனர். இதுகுறித்து அந்த பவுன்சர் கொடுத்த புகாரின் பேரில் போக்குவரத்து போலீசார் ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்தனர்.
பிறகு பெரியக்கடை காவல் நிலையத்துக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கார் பதிவு எண்ணை வைத்து விசாரித்ததில் சுதாகர் என்பவர் அந்த காரை புதுவைக்கு சுற்றுலா செல்வதாக கூறி வாடகைக்கு எடுத்து வந்துள்ளார் என்பது தெரிந்தது.
இதையடுத்து செங்கல்பட்டு பகுதியில் பதுங்கி இருந்து அவர்களில் 3 பேரை கைது செய்தோம். அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார். இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
The post பவுன்சரை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.