முதுகுளத்தூரில் நடைபயிற்சி சாலையை சீரமைக்க கோரிக்கை

சாயல்குடி,ஏப்.22:முதுகுளத்தூர் நகர மையத்தில் அமைந்துள்ள சரவணபொய்கை குளத்து கரையில் சேதமடைந்து கிடக்கும் நடைபயிற்சி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள சுப்ரமணியர் கோயில் சரவணபொய்கை குளம் அமைந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு கழிவுநீர் தேங்கி கிடந்த குளத்தை ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் நடந்தது. இதன் கரை பலப்படுத்தப்பட்டு பேவர் பிளாக் நடைபயிற்சி சாலை, மின் விளக்கு, ஓய்வு இருக்கை போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டது. இந்த நடைபயிற்சி சுற்று பாதையில் தினந்தோறும் காலை, மாலை வேளையில் நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி செய்கின்றனர். குறிப்பாக பெண்கள், முதியோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

குளத்து கரையோரம் உள்ள பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளும் படித்து வருகின்றனர். மேலும் ரேசன்கடை, காந்தி சிலை பேருந்து நிறுத்தம், தாலுகா அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், சுப்ரமணியர் கோயில் ஆகியவற்றிற்கு வரும் பொதுமக்கள், மாணவர்கள் இந்த நடைபயிற்சி வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் குளத்து கரையை பலப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட பாறை கட்டுமானங்கள் பெயர்ந்து விழுந்து சேதமடைந்து கிடக்கிறது. நடைபயிற்சிக்கு அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை சேதமடைந்து கிடக்கிறது. சுற்றி அமைக்கப்பட்ட கம்பி வேலி, தூண்கள், ஓய்வு இருக்கைகள் சேதமடைந்து கிடக்கிறது. வேலி இல்லாததால் நாய், மாடு உள்ளிட்ட கால்நடைகள் சுற்றி திரிகிறது. மேலும் புல்லிங்கோ பசங்க டூவீலரில் அதிவேகத்துடன் வருவதால் பெண்கள், முதியோர் அவதிப்படுவதாக கூறுகின்றனர்.

ஊரணிக்குள் கழிவுநீர் திறந்து விடப்படுவதால் கழிவுநீர் ஊரணியின் மையப்பகுதியில் உள்ள பள்ளத்தில் தேங்கி வருகிறது. சமீபத்தில் பெய்த மழைநீர், கழிவுநீருடன் கலந்து தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி தொல்லை தருவதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர். இதனை போன்று நடைபாதை ஓரத்தில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து வருவதால் நடைபயிற்சிக்கு இடையூறாக உள்ளது. எனவே நடைபயிற்சி பாதை மற்றும் சுற்றுபுறத்தை சீரமைக்க வேண்டும், கழிவுநீர் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும், தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post முதுகுளத்தூரில் நடைபயிற்சி சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: