ஈரோடு ஏப். 22: ஈரோட்டில் தமிழ்நாடு உரிமைகள் திட்ட களப்பணியாளர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கு மூன்று நாள் புத்தாக்க பயிற்சி முகாமின் துவக்க விழா நேற்று ஈரோடு திண்டலில் நடைபெற்றது. முகாமிற்கு மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணைய அலுவலகத்தின் மாநில திட்ட அலுவலர் அரவிந்த் பரத்வாஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கனரா வங்கி துணை பொது மேலாளர் சரவணன் குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வத்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, பங்கேற்று மாற்றுத்திறனாளிகள் நல திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகள் குறித்து விளக்கி பேசினார்.
இதில், மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்தும், மாற்றுத்திறனாளிகள் குறித்த விபரங்கள் சேகரித்தல் குறித்தும், மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை செயலி மூலம் எப்படி அப்டேட் செய்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் மாவட்டத்தில் பணியாற்றும் 254 களப்பணியாளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் சரவணன், கனரா வங்கி கோட்ட மேலாளர் சபால் கே. சத்யன், மாற்றுத்திறனாளிகள் நல திட்ட அலுவலர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் கவிதா, சீட்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post தமிழ்நாடு உரிமைகள் திட்ட களப்பணியாளர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.