2015ல் சென்னையில் இருந்து திண்டுக்கலுக்கு கடத்தி சென்று சிறுமியை தொடர் பலாத்காரம் செய்த சைக்கோ ஆசாமிக்கு ஆயுள் தண்டனை

* நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க கூடாது என மிரட்டியதால் 10 ஆண்டுகள் கிராமம் கிராமமாக தலைமறைவாக வாழ்ந்த குடும்பம்
* மகளிர் போலீஸ் தேடி கண்டுபிடித்து வாக்குமூலம் அளிக்க வைத்ததால் அதிரடி தீர்ப்பு

எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் போலீசார் திறமையாக செயல்பட்டு, சிறுமியை தேடி கண்டுபிடித்து வாக்குமூலம் அளிக்க வைத்து குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்துள்ளனர்.

சென்னை: சென்னையில் இருந்து 12 வயது சிறுமியை திண்டுக்கலுக்கு கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், சைகோ ஆசாமிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, எம்.கே.பி.நகரில் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் 2015ல் 12 வயது சிறுமியுடன் தம்பதி வாடகைக்கு குடியேறினர். வீட்டின் உரிமையாளரின் மருமகன் அப்பாஸ் அலி(41) என்பவர், தனது மாமனார் வீட்டிற்கு வரும் போது சிறுமிக்கு சாக்லெட் மற்றும் செலவுக்கு பணம் கொடுத்து பழக்கமாகியுள்ளார். இந்த பழக்கத்தில் சிறுமிக்கு அப்பாஸ் அலி வீட்டில் யாரும் இல்லாத போது பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அப்பாஸ் அலி சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி 2015 பிப்ரவரி 7ம் ேததி சென்னையில் இருந்து திண்டுக்கலுக்கு கடத்தி சென்றுள்ளார். பிறகு திண்டுக்கலில் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு ெசய்துள்ளார்.

பல இடங்களுக்கு அழைத்து சென்று சிறுமி என்றும் பாராமல் கொடூரமாக தொந்தரவு ெசய்துள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமியை அப்பாஸ் அலி மீண்டும் சென்னைக்கு அழைத்து வர முடியாத நிலை ஏற்பட்டது. உடனே சிறுமியை ஓட்டல் அறையிலேயே விட்டுவிட்டு அப்பாஸ் அலி மட்டும் ெசன்னைக்கு வந்துவிட்டார். வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானதால் பெற்றோர், உடன் படிக்கும் மாணவிகள் வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சிறுமியை திண்டுக்கல்லில் மீட்டனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, வீட்டின் உரிமையாளர் மருமகன் அப்பாஸ் அலி தன்னை சுற்றுலாவுக்கு அழைத்து செல்வதாக கூறி ஓட்டலில் அறை எடுத்து தங்கவைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

சிறுமியின் வாக்குமூலத்தின் படி இந்த வழக்கு எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. மகளிர் போலீசார் அப்பாஸ் அலி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அதேநேரம், தன் மீது சிறுமி பாலியல் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த அப்பாஸ் அலி, சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் சிறுமியை கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், வசதியான அப்பாஸ் அலியை பகைத்து கொண்டு சென்னையில் வாழ முடியாது என்று முடிவு செய்து, சிறுமியுடன் யாருக்கும் தெரியாமல் தென் மாவட்டத்திற்கு குடியேறிவிட்டனர்.
அதேநேரம் சிறுமியின் பாலியல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதற்கிடையே புகார் அளித்த சிறுமி மற்றும் அவரது பெற்றோர் எங்கு சென்றனர் என்று தெரியாமல் எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் போலீசார் குழப்பத்தில் இருந்தனர். சிறுமி இருக்கும் இடத்தை சில ஆண்டுகள் கழித்து தெரிந்து கொண்ட அப்பாஸ் அலி, அவரது பெற்றோர் மற்றும் சிறுமியிடம் ‘எனக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க கூடாது….. மீறி சாட்சியம் அளித்தால் குடும்பத்தையே கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டி வந்துள்ளார். அதோடு இல்லாமல், சிறுமியை மீண்டும் மிரட்டி பாலியல் தொந்தரவு ெசய்துள்ளார். ஒரு கட்டத்தில் அப்பாஸ் அலியின் தொந்தரவு தாங்க முடியாமலும், உயிருக்கு பயந்தும் சிறுமியை பள்ளிக்கு கூட அனுப்பாமல் அவரை அழைத்துக் கொண்டு பெற்றோர் தென்மாவட்டங்களிலேயே கிராமம் கிராமமாக கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை பெருநகர காவல்துறையில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வழக்குகள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் விசாரணை நடத்தி முடிக்க கமிஷனர் அருண் உத்தரவிட்டார். அதன்படி எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் போலீசார் 10 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த சிறுமியின் வழக்கை முடிக்க நடவடிக்கை எடுத்தனர். அதேநேரம் நீதிமன்றமும் சிறுமியின் பாலியல் வழக்கில் குற்றவாளியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அப்பாஸ் அலி மீது பாலியல் புகார் அளித்த சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரை மகளிர் போலீசார் தேட தொடங்கினர். புகார் அளித்த போது கொடுத்த ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வைத்து ஒரு வழியாக சிறுமியின் பெற்றோரை கண்டுபிடித்தனர். 12 வயதில் புகார் அளித்த சிறுமியை, தென்மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்த 22 வயது இளம்பெண்ணாக போலீசார் மீட்டனர்.

பிறகு பாதிக்கப்பட்ட இளம்பெண் மற்றும் பெற்றோர் அப்பாஸ் அலியின் 10 ஆண்டு கொடுமைகளை சொல்லி கண்ணீர் வடித்தனர். மிரட்டல் இருப்பதால் அப்பாஸ் அலிக்கு எதிராக நாங்கள் சாட்சியம் அளிக்க மாட்டோம் என்றும் கூறினர். அப்போது மகளிர் போலீசார் ‘நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம்’ என்று தைரியம் கொடுத்து பாதிக்கப்பட்ட இளம் பெண் மற்றும் அவரது பெற்றோரை சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் தங்கவைத்து, 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாலியல் கொடுமை பற்றி நீதிமன்றத்தில் இளம்பெண் வாக்குமூலம் அளிக்க வைத்தனர். அப்போது அவர், அப்பாஸ் அலியால் தினம் தினம் உயிர் பயத்திலும், பாலியல் தொந்தரவாலும் அனுபவித்த சித்ரவதைகளை கண்ணீர் மல்க நீதிபதி முன்பு சாட்சியமாக அளித்தார். அதை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.

அதனை தொடர்ந்து போக்சோ நீதிமன்றம் அப்பாஸ் அலிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் மூலம் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றவாளிக்கு சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. அதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமி குடும்பத்துடன் 10 ஆண்டுகள் மாயமான நிலையில், எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் போலீசார் திறமையாக செயல்பட்டு, சிறுமியை தேடி கண்டுபிடித்து குற்றவாளிக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தந்தது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post 2015ல் சென்னையில் இருந்து திண்டுக்கலுக்கு கடத்தி சென்று சிறுமியை தொடர் பலாத்காரம் செய்த சைக்கோ ஆசாமிக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: