தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ் அதிகாரிகள், படுகாயங்களுடன் வீட்டின் தரைத்தளத்தில் கொலையான நிலையில் கிடந்த ஓம் பிரகாஷின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ஓம் பிரகாஷை கத்தியால் குத்திக் கொலை செய்தற்கான அடையாளங்கள் உள்ளன. அவரது மகன் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓம் பிரகாஷின் வீட்டுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நெருங்கிய நண்பர்களிடம் ஏற்கெனவே ஓம் பிரகாஷ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சொத்து பிரச்னை காரணமாக கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் ஓம் பிரகாஷின் மனைவி பல்லவி, மகள் கிருதி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.
குடும்ப பிரச்னைகள் மற்றும் சொத்து தொடர்பான பிரச்னைகள் ஓம் பிரகாஷ் மற்றும் அவரது மனைவி பல்லவி இடையே பல ஆண்டுகளாக இருந்து வந்தன. இந்த விவகாரம் தொடர்பாக நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியபோது, பல்லவி தனது கணவரை கூர்மையான ஆயுதங்களால் வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் பலமுறை குத்திக் கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஓம் பிரகாஷ், சுமார் 15 நிமிடங்கள் துடிதுடித்து பலியானார். பின்னர், பல்லவி இந்த விவகாரத்தை தனது மகள் கிருதியிடம் தெரிவித்தார். மேலும், தனது தோழிக்கும் (ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஒருவரின் மனைவி) இதைத் தெரிவித்தார். அவர் எச்எஸ்ஆர் லேஅவுட் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
மேற்கண்ட தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தடயங்களை சேகரித்துக் கொண்டு உடலை பிரேத பரிசோதனைக்காக சென்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் இரண்டு கத்திகள், ஒரு பாட்டில், ரத்தம் படிந்த படுக்கை விரிப்பு மற்றும் துணி மாதிரிகள் கைப்பற்றப்பட்டது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்ற போது, பல்லவி வீட்டின் கதவை உள்தாழிட்டு பூட்டியிருந்தார்.
காவல்துறையினர் அலாரம் மணி அடித்தபோதும், உடனடியாக கதவைத் திறக்க அவர் தயங்கினார். சுமார் அரை மணி நேரம் காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்திய பின்னர், அவர் கதவைத் திறந்தார். பின்னர், அவரே காவல்துறையினரை தரைதளத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஓம் பிரகாஷின் உடலைக் காண்பித்தார். அப்போது அவர் அழுதார். இதற்கிடையே ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஒருவரின் மனைவிக்கு வீடியோ அழைப்பு மூலம் பேசிய பல்லவி, ‘அந்த மிருகத்தை முடித்துவிட்டேன்’ என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017ல் ஓய்வு பெற்ற ஓம் பிரகாஷ், பெங்களூரு நகரின் புறநகர் பகுதிகள் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வாங்கிக் குவித்திருந்தார். தனது மனைவி, மகன், மகள் பெயர்களிலும் பல கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கி வைத்திருந்தார்.
பெங்களூருவில் இரண்டு வீடுகள், காவிரி சந்திப்பு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட், மற்றும் எச்எஸ்ஆர் லேஅவுட்டில் மூன்று மாடி வீடு ஆகியவை இருந்தன. ஓம் பிரகாஷ் பெரும்பாலான நேரத்தை இந்த பிளாட்டிலேயே செலவிட்டார். சமீபத்தில், தாண்டேலியில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்தை தனது சகோதரிகள் பெயரில் பதிவு செய்திருந்தார். இதற்கு பல்லவி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் காரணமாகவும் பல மாதங்களாக தம்பதியர் இடையே தகராறு இருந்தது. இதுவும் கொலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் ஓம் பிரகாஷுக்கு, சிக்கமகளூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நெருக்கமான தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2015ல் டிஜிபியாக இருந்தபோது அந்தப் பெண், நிருபதுங்கா சாலையில் உள்ள காவல்துறை தலைமையகத்தின் முன்பு வந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஓம் பிரகாஷ் தன்னை ஏமாற்றியதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், ஓம் பிரகாஷின் மகன் கார்த்திகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தன்மீது தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். பின்னர், ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனுப்பப்பட்டார். இந்த விவகாரமும் தம்பதியர் இடையே மோதலை ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில் அந்தப் பெண் ஓம் பிரகாஷை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரமும் கொலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று அதிகாரிகள் கூறினர்.
‘போவா’ வாட்ஸ்அப் குழு
ஓய்வு பெற்ற டிஜிபி ஓம் பிரகாஷின் கொலைக்கு சில நாட்களுக்கு முன்பு, அவரது மனைவி பல்லவி, காவல் அதிகாரிகளின் மனைவியர் சங்கமான ‘போவா’ என்ற வாட்ஸ்அப் குழுவில், தனது கணவர் ஓம் பிரகாஷுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும், கொடூரமாக கொலை செய்த பிறகு, முன்னாள் காவல் அதிகாரி ஒருவரின் மனைவிக்கு வீடியோ அழைப்பு செய்து, ‘நான் அந்த மிருகத்தை முடித்துவிட்டேன்’ என்று கோபமாக கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஓம் பிரகாஷ் – பல்லவி இடையே குடும்ப பிரச்னைகள் பல ஆண்டுகளாக நீடித்த நிலையில், சமீபத்தில் சொத்து தொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் விரக்தியடைந்த பல்லவி, ‘போவா’ வாட்ஸ்அப் குழுவில் கடந்த நான்கைந்து நாட்களுக்கு முன்பு, ‘எனது கணவர், எனக்கும், எனது மகளுக்கும் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்பம் விளைவிக்கிறார். வீட்டில் எப்போதும் துப்பாக்கியுடன் உலாவுகிறார். எனவே போலீஸ் அதிகாரிகள் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று கோரியிருந்தார். இவரது பதிவுக்கு பின்னர் அவரது சில தோழிகள், அவரை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
பல்லவிக்கு மனநோய்?
ஓம் பிரகாஷின் மனைவி பல்லவி, கடந்த 12 ஆண்டுகளாக ஸ்கிசோஃப்ரினியா (மனப்பிரமை நோய்) என்ற மனநல கோளாறால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. சிறு சிறு விஷயங்களுக்குக் கூட தனது கணவருடன் தகராறு செய்து வந்தார். தனது கணவர் ஒரு பெண்ணிடம் பேசினாலும் கூட தவறாகப் புரிந்து கொண்டு வாக்குவாதம் செய்தார். சம்பவம் நடந்த நேற்று மாலை 4.30 மணியளவில், ஓம் பிரகாஷ் கொலை செய்யப்பட்ட போது, அந்த வீட்டில் மூவர் இருந்தது தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மனைவி, மகள் தவிர மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
The post பல கோடி ரூபாய் சொத்து பிரச்னை, பெண்ணுடன் தொடர்பு விவகாரம்: ஓய்வுபெற்ற கர்நாடக டிஜிபி-யை கொன்ற மனைவி, மகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை appeared first on Dinakaran.