சட்டப்பேரவையில் வினா – விடை நேரத்தின்போது, உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார் அமைச்சர் சேகர்பாபு..!!

சென்னை: சட்டப்பேரவையில் வினா – விடை நேரத்தின்போது, உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலளித்தார். அதில், இந்து சமய அறநிலையத்துறை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (21.04.2025) வினா – விடை நேரத்தின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் . எம்.எச். ஜவாஹிருல்லா, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் கே.மரகதம் குமரவேல், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சி.கிருஷ்ணமுரளி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி:

பேரவைத் தலைவர் , பல்லாவரம் தொகுதி, திருநீர்மலை, அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில் பணியாளர்களுக்கான குடியிருப்புகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு ஆவன செய்யுமா?

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் :

பேரவை தலைவர் , உறுப்பினர் கூறிய 108 திவ்ய தேசங்களில் 61 வது திவ்ய தேசமான அத்திருக்கோயிலில் ரூ.2.62 கோடி செலவில் 12 அர்ச்சகர்கள் குடியிருப்பு கட்டப்பட்டு வருகின்றது. அதில் 92 சதவீத பணிகள் நிறைவுற்றிருக்கின்றது. அடுத்த மாத இறுதிக்குள்ளாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அந்நிகழ்ச்சியில் நானும் அந்த மாவட்டத்தின் அமைச்சர் தா.மோ. அன்பரசனும் , சட்டப்பேரவை உறுப்பினரும் கலந்து கொண்டு 12 குடியிருப்புகளை அர்ச்சகர்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு ரூ.186 கோடி செலவில் சுமார் 586 அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் 42 குடியிருப்புகள் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி :

பேரவை தலைவரே, அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அதே நேரத்தில் பல்லாவரம் தொகுதியில் இருக்கின்ற ரங்கநாத பெருமாள் கோயிலுக்கு நேற்றைக்கு முன்தினம் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வந்து சென்றிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் மிக முக்கியமான பெருமாள் கோயில். எல்லோரும் ஆந்திர மாநிலத்திற்கு சென்று வெங்கடேச பெருமாளை தரிசிப்பதற்கு இந்தக் கோயில் வளர்ந்து வருகின்றது. அந்த திருக்கோயிலுக்கு ஏற்கனவே முதல்வர், அமைச்சர் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று ரூ. 10 கோடி செலவில் ரோப்கார் அறிவித்திருக்கிறார்கள். அந்தப் பணிகள் எப்போது தொடங்கப்படும் அதே நேரத்தில் அந்த கோயில் வளாகத்தை சுற்றி அண்டர் கிரவுண்ட் கேபிள் புதைவடங்கள் எல்லாம் பணிகள் முடிவு பெற்றது. இன்னும் மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. எப்பொழுது மின் இணைப்புகள் வழங்கப்படும். ரோப்கார் பணிகள் எப்போது தொடங்கப்படும் என்பதை தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்:

பேரவை தலைவரே, உறுப்பினருடைய கோரிக்கையை ஏற்று நானும் அந்த மாவட்ட அமைச்சர் அன்பரசன் அந்த திருக்கோயிலுக்கு படி வழியாக சென்று இறை தரிசனம் மேற்கொண்டோம். அதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் வைத்த கோரிக்கைக்கு ஏற்ப 19 கோடியே 60 லட்ச ரூபாய் செலவில் ரோப்கார் அமைப்பதற்கு அரசினுடைய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது. வெகு விரைவில் ஒப்புதல் கிடைத்துவிடும். இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் அதற்குண்டான நிதி ஒட்டுமொத்தமாக அரசே மானியமாக வழங்குகிறது என்ற செய்தியை பதிவு செய்து கூடிய விரைவில் அந்த ரோப்கார் அமைப்பதற்கான பணிகள் துவக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி:

மாண்புமிகு பேரவை தலைவரே , பல்லாவரம் பகுதியில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டிய திருக்கோயில்கள் பொழிச்சலூர் ஊராட்சி அகத்தீஸ்வரர் ஆனந்தவல்லி திருக்கோயில், பிடாரிகல்லி அம்மன் கோயில், குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் உள்ள பிரசன்னயோக ஆஞ்சநேயர் கோயில், பம்மல் அருள்மிகு சூரியம்மன் கோயில் ஆகிய திருக்கோயில்கள் எல்லாம் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி உள்ளது. மக்கள் ஆர்வத்தோடு இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நெமிலிச்சேரி பகுதியில் சிவன் கோயில் குளத்தை தூர்வார வேண்டும். அதேபோல் பொழிச்சலூர் பேரேரி அம்மன் கோயில் குளம் தூர்வாரி நடைபாதைகள் அமைக்க அரசு முன்வருமா என்பதை கேட்டு அமைகிறேன்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்:

பேரவை தலைவர், இயேசுவை கும்பிடுவராக இருந்தாலும் பரவாயில்லை. பல இந்து கோயில்களுக்கு சென்று வருகிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது. அவர் மூன்று திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த வேண்டுமென கேட்டுள்ளார். அந்த பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இரண்டு திருக்குளங்களை பற்றி கேட்டிருக்கின்றார். அதில் ஒரு திருக்குளம் 50 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு நடைபெற்று வருகிறது. மற்றொரு திருக்குளப் பணி உபயதாரர் நிதியில் செய்வதாக அறிவித்திருந்தார்கள். உபயதாரர் அதற்கு முன் வரவில்லை. ஆகவே உபயதாரர் நிதி கிடைக்காத பட்சத்தில் ஆணையரின் பொது நலநிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கூடிய விரைவில் அந்த பணிகளும் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, இன்றோடு இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 2,847 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்திருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா:

பேரவை தலைவர் , என்னுடைய பாபநாசம் தொகுதி, அய்யம்பேட்டையில் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் இருக்கின்றது. அந்த கோயிலில் பணிபுரியக்கூடிய நிர்வாக அலுவலருக்கு தனி அலுவலகம் இல்லை. சுற்றி இருக்கக்கூடிய 48 திருக்கோயில்களின் வரவு செலவு கணக்குகளும் இந்த கோயிலிலே தான் பராமரிக்கப்படுகிறது. எனவே இந்த கோயிலில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்காக தனி அலுவலகம் அமைத்து தருவதற்கு அமைச்சர் முன் வருவாரா என்று உங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்:

பேரவை தலைவர் , தமிழக முதல்வர் திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு பல்வேறு இடங்களில் இணை ஆணையர்கள், உதவி ஆணையர்களுக்கு தனியாக அலுவலகம் கட்டப்பட்ட வருகின்றன. அதேபோல் ஆய்வாளர் நிலையில் இருக்கின்ற அலுவலர்களுக்கு 100 இடங்களில் அலுவலகங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு அதில் 60 சதவீத பணிகள் நிறைவுற்றுள்ளன. உறுப்பினர் கோரிய அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் செயல் அலுவலருக்கு அலுவலகம் கட்டுவது தொடர்பாக விரைவில் ஆய்வு செய்து சாத்திய கூறுகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு இடத்தில் நிர்வாக வசதிக்காக அந்த அலுவலகம் கட்டித் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் கே.மரகதம் குமரவேல் :

பேரவை தலைவர், எனது மதுராந்தகத் தொகுதியில் திருமலை வையாவூரில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற நரசிம்ம மன்னரால் கட்டப்பட்டது. கடந்த வருடம் குடமுழுக்கு நடைபெற்றது. இத்திருக்கோயிலுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. தென்திருப்பதி என்றும் அழைப்பார்கள். திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் கோயில்களில் நடைபெறுவதால் பக்தர்கள் பயன்பெறும் வகையில் அப்பகுதியில் திருமண மண்டபம் அமைப்பதற்கு அமைச்சர் முன் வருவாரா என அறிய விரும்புகிறேன்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்:

பேரவை தலைவர் , தமிழக முதல்வர் தலைமையில் இந்த ஆட்சி அமைந்த பிறகு சட்டமன்ற அறிவிப்பின்படி 324 கோடி ரூபாய் செலவில் 79 திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று இன்னார் இனியவர் என்ற பாகுபாடு இல்லாமல் திருமண மண்டபங்கள் மற்றும் இதர மண்டபங்கள் 26 மண்டபங்கள் கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளன. உறுப்பினர் கோரிய அந்த திருக்கோயிலை உடனடியாக ஆய்வு செய்து எவ்வளவு திருமணங்கள் நடக்கிறது என்பதை கணக்கிட்டு பெரிய அளவில் இல்லை என்றாலும் உறுப்பினர் வைத்த கோரிக்கை நிறைவேற்றுகின்ற வகையில் ஒரு திருமண மண்டபம் கட்டுவதற்கு இந்த ஆண்டு பணிகள் துவக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் சி. கிருஷ்ணமுரளி :

பேரவை தலைவர், 2019 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, திருநெல்வேலி என இரண்டாக பிரிக்கப்பட்டது. ஏற்கனவே இணை ஆணையர் அலுவலகம் இரண்டுக்கும் சேர்த்து திருநெல்வேலியில் இருந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு அறநிலையத்துறையின் இணை ஆணையாளர் அலுவலகம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றுவிட்டது. அதனால் 120 கிலோமீட்டர் தொலைவில் போய்வர மக்கள் சிரமப்படுகிறார்கள். அதனால் இணை ஆணையர் அலுவலகம் தென்காசி மாவட்டத்தில் தனியாக இயங்குவதற்கு அமைச்சர் ஆவண செய்வாரா என்பதை கேட்டு அமைகிறேன்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்:

பேரவை தலைவர் , இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைக்கு முன்பு முதல்வர் துறை சார்ந்த ஆய்வினை மேற்கொள்ளுகின்ற போது வேலூர் மண்டலம் அதிக பரப்பளவை கொண்டதாகவும், 905 திருக்கோயில்கள் அடங்கியுள்ளதாலும் அதை இரண்டாக பிரிப்பதற்கும், அதேபோல் தர்மபுரி மாவட்டம் வெகு தூரத்தில் அதிக பரப்பளவில் 1,151 திருக்கோயில்களை கொண்ட மாவட்டமாக இருப்பதால் அதையும் பிரிப்பதற்கும், திருநெல்வேலி மண்டலமும் அதே போல் பிரிக்க வேண்டி உள்ளதாலும் அது குறித்த கருத்துருவும் வந்துள்ளது என்பதனை தெரிவித்தோம். அதனடிப்படையில் வெகுவிரைவில் முதலமைச்சர் அதனை அறிவிக்க இருக்கின்றார்கள். அந்த மாவட்டம் 2019 அறிவிக்கப்பட்டது என்றாலும் இரண்டு ஆண்டுகள் இடைவெளி இருந்தது. இருந்தாலும் பரவாயில்லை உறுப்பினர் கோரிய இணைய ஆணையர் அலுவலகத்திற்கு சரியாக இடத்தினை தேர்வு செய்து நிச்சயமாக அதற்குண்டான கட்டடத்தை கட்டுவதற்கு இந்த ஆண்டுக்குள்ளாக கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன்:

பேரவை தலைவர் , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு, எனது பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான வாலிகண்டபுரம் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், திருவாலந்துறை அருள்மிகு தேளீஸ்வரர் திருக்கோயில், அதேபோல காரியானூர் அருள்மிகு ஆதி தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் ஆகிய மூன்று கோயில்கள் பழமையான கோயில்களாகும். அதிகமான திருமணங்கள் நடைபெறுகின்ற கோயில்கள் என்பதால் நீண்ட காலமாக திருப்பணி செய்யாமல் குடமுழுக்கு செய்யாமல் இருக்கிறது. எனவே இந்துக்களின் பாதுகாவலராக விளங்கி கொண்டிருக்கின்ற ஆன்மீக ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற நமது தமிழக முதல்வர் ஆட்சியிலே இந்த கோயில்களுக்கு எல்லாம் குடமுழுக்கு செய்யப்படுமா என்பதை கேட்டு அரிய விரும்புகிறேன்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்:

பேரவை தலைவர் , உறுப்பினர் வாலீஸ்வரர், தேளீஸ்வரர், ஆதி தான்தோன்றீஸ்வரர் ஆகிய மூன்று திருக்கோயில்களும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில் என்று குறிப்பிட்டார். இது ஆட்சி ஏற்பட்ட பிறகு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்கள் என 714 திருக்கோயில்கள் வகைப்படுத்தப்பட்டு அதில் 274 திருக்கோயில்களுக்கு தமிழக முதல்வர் ஆண்டிற்கு ரூ.100 கோடி வீதம் மூன்றாண்டுகளுக்கு ரூ.300 கோடியும், இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.125 கோடியும் அரசின் சார்பில் மானியமாக வழங்கி இருக்கின்றார். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரை வழங்கப்பட்ட அரசு மானியத்தொகை மட்டும் ரூ.425 கோடியாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நம் மன்னர்கள் விட்டுச் சென்ற பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டும் என்று இன்றைய மாமன்னர் நம்முடைய முதல்வர் சுமார் ரூ. 425 கோடி ஒதுக்கீடு செய்திருக்கின்றார். இதுவரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட 52 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவுற்றுள்ளது. அதில் ஒரு கோயிலான யுனெஸ்கோ விருது பெற்ற துக்காச்சி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலுக்கு நேற்றைய தினம் நானும், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தோம். இப்படி வரலாற்றில் சிறப்பாக பதிவிடக்கூடிய அளவிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உறுப்பினர் கோரிய திருக்கோயில்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும். அத்திருக்கோயில்களுக்கு திருப்பணிகளை மேற்கொண்டு விரைவாக குடமுழுக்கு நடைபெறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டது.

 

The post சட்டப்பேரவையில் வினா – விடை நேரத்தின்போது, உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார் அமைச்சர் சேகர்பாபு..!! appeared first on Dinakaran.

Related Stories: