ஊட்டி : ஊட்டி ரோஜா பூங்காவில் கவாத்து செய்யப்பட்ட ரோஜா செடிகளில் பூக்கள் பூக்க துவங்கியுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, தேயிலை பூங்கா, ஜான் சலீவன் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்கள் உள்ளன.
கோடை சீசன் சமயத்தில் வர கூடிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நோக்கில் பூங்காக்களில் மலர் நடவு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடை விழா நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஊட்டி விஜயநகரம் பகுதியில் உள்ள ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ வசதியாக பூங்காவை தயார் படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரோஜா மலர் செடிகளை கவாத்து செய்யும் பணிகள் துவங்கின. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைவதை தவிர்க்கும் வகையில் மேற்புறம் முதலிலும், அதன் பின் கீழ்புற பாத்திகளில் உள்ள செடிகளும் கவாத்து செய்யப்பட்டது.
இந்த சூழலில் ஊட்டியில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வரும் நி்லையில், வெட்டப்பட்ட செடிகள் நன்கு துளிர் விட்டுள்ளன. சாண உரமிட்டு பராமரிக்கும் பணிகள் மேற்கொண்டதை தொடர்ந்து அவை பூக்க துவங்கியுள்ளன.
இம்மாத இறுதியில் அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்துக்குலுங்கும் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர். இதனிடையே பூங்காவில் பூக்க துவங்கியுள்ள மலர் செடிகளை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்கின்றனர்.
The post ஊட்டியில் ரோஜா பூங்காவில் கவாத்து செய்யப்பட்ட ரோஜா செடிகளில் மலர்ந்த பூக்கள் appeared first on Dinakaran.