கோவை நகைப்பட்டறையில் தங்கக்கட்டி திருடி ஆடு, கோழி வெட்டி முதலாளி, போலீசாருக்கு சூனியம் வைத்த வாலிபர்

*குடும்பத்துடன் சுற்றுலா சென்று திரும்பியபோது சிக்கினார்

கோவை : நகைப்பட்டறையில் தங்கக்கட்டி திருடி ஆடு, கோழி வெட்டி முதலாளி, போலீசாருக்கு சூனியம் வைத்த வாலிபர் குடும்பத்துடன் சுற்றுலா சென்று திரும்பியபோது போலீசாரிடம் சிக்கி கொண்டார்.

கோவை கெம்பட்டி காலனி பாளையம்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சரவணமூர்த்தி (40). இவர் வீட்டின் ஒரு பகுதியில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 10 வருடமாக செல்வபுரம் எல்ஐசி காலனியை சேர்ந்த கார்த்தி (30) என்பவர் வேலை செய்து வந்தார்.

கடந்த 4ம் தேதி சரவணமூர்த்தி ரூ.17 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கக்கட்டியை கார்த்தியிடம் கொடுத்து ஆபரணம் செய்யும் இடத்தில் கொடுக்கும் படி கூறியுள்ளார். தங்கக்கட்டியை வாங்கி சென்ற அவர் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. அவருக்கு போன் செய்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த சரவணமூர்த்தி அவரை தேடி வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு அவர் இல்லை. கார்த்தி நகையை திருடி மாயமாகி இருந்தது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து சரவணமூர்த்தி பெரியகடை வீதி போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கார்த்தியை தேடி வந்தனர். மேலும், துணை கமிஷனர் உதயகுமார் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டியை திருடி செனற் கார்த்தியை பிடிக்க தனிப்படைக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இதையடுத்து உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி தலைமையில் எஸ்ஐ மாரிமுத்து, உமா மற்றும் போலீசார் கார்த்தி, பூபதி ஆகியோர் அடங்கி தனிப்படையினர் கார்த்தியை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

செட்டி வீதியில் பதுங்கி இருந்த கார்த்தியை நேற்று மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று அவர் கடந்த 15 நாட்களாக எங்கு பதுங்கி இருந்தார்? நகையை என்ன செய்தார்? என்பது குறித்த விசாரணை நடத்தினர். அப்போது அவர் அதிர்ச்சியுட்டும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து போலீஸ் உயரதிகாரி கூறியதாவது: கைது செய்யப்பட்ட கார்த்திக்கு லட்சக்கணக்கில் கடன் உள்ளது. இதனால் என்ன செய்வது? என்று தெரியாமல் இருந்து வந்துள்ளார். கடனில் இருந்து தப்பிக்க பில்லிசூனியம்தான் சிறந்த வழி என நினைத்து ஆடு, கோழி என காவு கொடுத்து வந்துள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு கடன் தொல்லை குறைந்ததாக நம்பி உள்ளார்.

இதன் அடுத்தப்படியாக கடன் பிரச்னையில் இருந்து முழுமையாக தப்பிக்க என்ன செய்யலாம்? என யோசித்துள்ளார். அப்போதுதான் அவருக்கு தான் வேலை செய்யும் இடத்தில் இருந்து தங்கக்கட்டியை திருடி சூனியம் வைக்க திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து அவர் கடந்த 4ம் தேதி தனது முதலாளி கொடுத்த தங்கக்கட்டியை எடுத்து கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலைக்கு சென்றுள்ளார்.

அங்கு ஆடு, கோழியை பலி கொடுத்து தனது முதலாளி நகை கொடுத்ததை மறக்க வேண்டும் என்றும், போலீசார் பிடிக்கக்கூடாது என்றும் சூனியம் வைத்துள்ளார். அதன் பின்னர் மனைவி, குழந்தைகளுடன் சென்னை, பாண்டிச்சேரி என சுற்றுலா சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

சூனியம் வைத்ததால் இனி தன்னை போலீசார் பிடிக்க மாட்டார்கள் என கோவை திரும்பி செட்டி வீதி பகுதியில் இருந்து கண்காணித்து உள்ளார். ஆனால் அவரை கண்காணித்து மடக்கி பிடித்து விட்டோம். அவர் திருடி சென்ற தங்கக்கட்டியையும் அவர் விற்பதற்கு முன்பாக மீட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் கார்த்தியை கைது செய்து, சிறையில் அடைத்தனர். கார்த்தியை விரைவாக கைது செய்த தனிப்படையினருக்கு இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி பரிசு கொடுத்து பாராட்டினார்.

The post கோவை நகைப்பட்டறையில் தங்கக்கட்டி திருடி ஆடு, கோழி வெட்டி முதலாளி, போலீசாருக்கு சூனியம் வைத்த வாலிபர் appeared first on Dinakaran.

Related Stories: