சென்னையில் ஈஸ்டர் பண்டிகை கோலாகலம்: ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

சென்னை: சென்னையில் ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவ தேவாலயங்களில் உயிர்ப்பு பெருவிழா சிறப்பு வழிபாடு, பிரார்த்தனைகள் நடைபெற்றன. புனித வெள்ளியன்று, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக அவர் பட்ட பாடுகளை எடுத்துக் கூறும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப் பாதை பவனி நடைபெற்றது.

இதையடுத்து சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்த 3வது நாளை உயிர்ப்பு பெருவிழா மற்றும் ஈஸ்டர் பண்டிகையாகக் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் நேற்று ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள், ஜெபங்கள் நடைபெற்றன. பின்னர், இயேசு உயிர்தெழுந்த நிகழ்வு தேவாலயத்தில் அரங்கேற்றப்பட்டது. அந்த நிகழ்வை வாணவேடிக்கைகளுடன் கிறிஸ்தவர்கள் வரவேற்றனர். பின்னர், சிறப்பு திருப்பலியில் பூஜிக்கப்பட்ட தீர்த்தத்தை பாதிரியார்கள், கிறிஸ்தவர்கள் மீது தெளித்து அருளாசி வழங்கினர்.

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதேபோல், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், எழும்பூர் இருதய ஆண்டவர் ஆலயம், மயிலாப்பூரில் உள்ள லஸ் தேவாலயம், பரங்கிமலையில் உள்ள புனித தோமையார் மலை தேவாலயம், சின்னமலை ஆரோக்கிய அன்னை திருத்தலம் என சென்னை மற்றும் புறநகர் உட்படத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்றன.

பல தேவாலயங்களில் இயேசு உயிர்த்தெழுதல் லேசர் விளக்குகளாலும், நாடகங்களாலும் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டன. பின்னர் 12 மணிக்கு அனைத்து தேவாலயங்களிலும் பட்டாசுகளை வெடித்தும், கேக்குகளை பரிமாறியும் இயேசு உயிர்த்தெழுதலை கிறிஸ்தவர்கள் கொண்டாடினர். தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து தேவாலயத்திலும் நேற்று காலை முதல் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

* அன்பே வெல்லட்டும்; உலகை ஆளட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: ‘அமைதி, பொறுமை, இரக்கம், இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்யும் நற்குணம் ஆகியவற்றின் பேருருவமான இயேசு பிரானின் வழியைப் பின்பற்றி நடக்கும் கிறித்தவப் பெருமக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நாள் வாழ்த்துகள்! உலகெங்கும் வெறுப்பும், வன்முறையும் நீங்கி நல்லிணக்கம் செழித்திட இயேசு பெருமகனாரின் போதனைகள் வழிகாட்டட்டும்! அன்பே வெல்லட்டும், உலகை ஆளட்டும்!’இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post சென்னையில் ஈஸ்டர் பண்டிகை கோலாகலம்: ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: