சென்னை: முதுகலை ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி மே.5ம் தேதி தொடங்க உள்ளதாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 2025-26ம் கல்வியாண்டு முதல், முதுகலை ஆசிரியர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன்வளர் பயிற்சி வழங்கும் பொருட்டு கட்டகம் தயாரிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.
வருகிற மே மாதம் 5ம் தேதி முதல் முதுகலை ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் தொடங்கப்பட உள்ளது. மே மாதம் 16ம் தேதி வரை நடைபெறும் பயிற்சியில் முதுகலை ஆசிரியர்கள் பங்கேற்கும் வகையி்ல், குறிப்பிட்ட நாட்களுக்கு அவர்களுக்கு பணி விடுப்பு வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பயிற்சி பங்கேற்கும் ஆசிரியர்கள், தங்கள் பாடத்திற்கான பாடப்புத்தகங்களை எடுத்து வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post முதுகலை ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி மே 5ல் தொடக்கம்: மாநில கல்வியியல் ஆராய்ச்சி இயக்குனரகம் தகவல் appeared first on Dinakaran.