கிரி சக்ர ரதாரூட தண்டநாதா புரஸ்க்ருதா
சென்ற இதழின் தொடர்ச்சி…
நாம் செய்யக் கூடிய இந்த கர்மாவை யோகமாக மாற்றக் கூடியது யாரெனில், மஹா வாராஹி. அவள்தான் கிரி சக்ர ராஜ ரதத்தில் இருக்கிறாள். ஏன் பன்றி முகத்தை வாராஹியோடு தொடர்பு படுத்திக் கொண்டே இருக்கிறோமெனில், நம்முடைய கர்ம வாசனையானது எவ்வளவு ஆழமாக இருந்தாலும் அதை பிடுங்கிப் போடக் கூடிய சக்தி பன்றிக்கு உண்டு. வராஹத்திற்கு உண்டு. வராஹ அவதாரத்தில் ஆவரண ஜலத்தில் மறைத்து வைக்கப்பட்ட பூமியையே வராஹ ரூபம் எடுத்துத்தான் தூக்குகிறார். வராஹ மூர்த்தியினுடைய சக்தியாகத்தான் வாராஹி இருக்கிறாள். எப்படி ஆவரண ஜலத்தில் மறைந்திருந்த பூமியை பகவான் வராஹ ரூபமெடுத்து தூக்கினாரோ, அதேபோல நம்முடைய ஒவ்வொருவரின் அஞ்ஞானம் என்கிற ஆவரணத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கர்ம வாசனையை அம்பாள் மஹாவாராஹி உள்ளே புகுந்து, நம்முடைய கர்ம வாசனையை பிடுங்கி எடுத்து விடுவாள். அப்படி பிடுங்கி எடுக்கக் கூடியவள் மஹா வாராஹி. அதனால்தான் கிரி சக்ரம் ரதா ரூடா… என்று இங்கு வந்திருக்கிறது.
இது சாதாரண செயல் அல்ல. நம்மால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத செயல் இது. இங்கு வாராஹியானவள் பெரிய கர்மாவைச் செய்கிறாள். அது என்ன செய்கிறதெனில், நம்மை கர்மாவினின்று விடுவிக்கின்றது. அவள் செய்யக்கூடிய பெரிய செயல் என்னவெனில், நம்மை செயலற்ற நிலைக்கு கொண்டு போய்விடுகிறது. இப்போது நமக்கு வித்தியாசம் தெரியும். நாம் சாதாரணமாக செய்யக் கூடிய செயல்கள் மீண்டும் மீண்டும் நம்மை செயல்களுக்குள்ளேயே கொண்டு போகும். ஆனால், அம்பாள் செய்கின்ற செயல் இருக்கிறதல்லவா, நம்மை செயலற்ற நிலைக்கு கொண்டுபோய் விடும். அப்போது செயலற்ற நிலைக்கு கொண்டுபோகும் பெரிய செயல்தான் அம்பாள் செய்கின்ற இந்தச் செயல்.
அதனால்தான் ஸ்ரீ சக்ர ராதாரூட… என்று சொல்லும்போது மனதில் அந்த விஷயம் உத்பவமாகி, கேய சக்ர ரதாரூட.. என்று சொல்லும்போது அந்த ஞானம் அந்த வாக்கு வழியாக வந்து, கிரி சக்ர ரதா ரூட… என்று சொல்லும்போது அது செயலில் வெளிப்படுகிறது. அப்போது இந்த சாதகன் செய்கின்ற ஒவ்வொரு செயலும் அவனை ஞானத்தை நோக்கி முன்னேற்றிக் கொண்டே போகுமே தவிர, அவனை மீண்டும் இந்த சம்சாரத்தில் சிக்க வைக்காது. அம்பாள் இந்த செயல்களையெல்லாம் எதற்கு செய்கிறாளெனில், செயலற்ற நிலைக்கு கொண்டுபோவதற்காக செய்கிறாள். செயலற்ற நிலைதான் இங்கு இருப்பதிலேயே மிகப் பெரிய செயல். ரமண பகவான் எந்த நிலையில் இருந்தார்கள். சதாசிவ பிரம்மேந்திரர் என்ன நிலையில் இருந்தார்கள். பகவான் பாபா… போன்றோர்கள் அனைவரும் இருந்தது செயலற்ற நிலைதான். ஆனால், அவர்கள் செய்ததுபோன்ற செயலை இங்கு யாருமே செய்யவில்லை. அவர்களைப் போன்ற செயலை யாராலும் செய்ய முடியாது. நமக்கு வெளியிலிருந்து பார்க்கும்போது ரமணர் என்ன செய்தார். சோபாவில் உட்கார்ந்திருந்தார் என்று தோன்றும். யோகிராம்சுரத்குமார் என்ன செய்தார்… என்பதெல்லாம் நம் மனதிற்கு அப்பாற்பட்டதாகும்.
இப்படி செயலற்ற நிலையில் இருந்து கொண்டே செயலைச் செய்பவளே மஹாவாராஹி. இனி கர்மாவோ… பந்தமோ… பிறப்பு இறப்போ எதுவுமே இருக்காது. ராக்கெட் விடும்போது escape velocity என்று ஒரு விஷயத்தை கணிப்பார்கள். இந்த escape velocity ஐ determine செய்தால்தான் ராக்கெட்டையே விட முடியும். ஏன் அப்படியெனில், இந்த escape velocityக்குள் இருந்தால் இந்த ராக்கெட்டானது வெளியே செல்ல முடியாது. Rocket will not go to outer space இந்த escape velocity ஐ determine பண்ணக் கூடியவள் மஹாவாராஹி. அவள்தான் தண்டநாதா. ஏன் அவளுக்கு தண்டநாதா என்று பெயரெனில், கையில் தண்டம் வைத்துக் கொண்டிருப்பாள். இந்த தண்டம் எதற்கு எனில், இந்த சைன்னியத்தை ஒழுங்கு படுத்துவதற்குத்தான். இந்த குதிரைப் படை, யானைப்படை, காலாட்படை, ரதப் படை என்று எல்லாவற்றையும் ஒழுங்கு செய்பவளாக தண்டத்தை ஏந்திக் கொண்டு தண்டநாதாவாக திகழ்கிறாள். அப்போது இந்த சாதகனை அம்பாள் அவனுடைய செயல்களையும் சேர்த்து ஒழுங்குபடுத்துகிறாள். இதை இப்படி செய்ய வேண்டும். ஒருவன் அத்யாத்ம சாதனையில் முன்னேற முன்னேற அவனுடைய வேலைகளை இன்னும் ஆழமாக்கியபடியே செல்கிறாள். Refine செய்கிறாள். இந்த refinement takes place.
அம்பாளுக்கு தண்டநாதா என்று பெயர் தண்டம் வைத்திருக்கிறாள் என்று பார்த்தோம். வாராஹி எப்படி தண்டம் வைத்திருக்கிறாளோ… அதேபோல இன்னும் இரண்டு பேர் தண்டம் வைத்திருக்கிறார்கள். யாரெனில், ஒருவர் எமதர்மராஜன். இன்னொருவர் தண்டாயுதபாணியாக இருக்கக் கூடிய குரு மூர்த்தியாக இருக்கக்கூடிய சுப்ரமணிய சுவாமி. மஹா வாராஹியின் கையில் தண்டம் இருக்கிறது. இத்தனை நாட்களாக சாதகனுடைய கர்மத்திலிருந்து விடுவிக்கிறாள் அல்லவா… இத்தனை நாட்கள் எமனுடைய கர்ம தண்டத்திற்கு பயந்து கொண்டிருந்தான். தன்னுடைய தண்டத்தினால் விடுவித்து குரு மூர்த்தியாக இருக்கக் கூடிய சுப்ரமணிய சுவாமியாக இருக்கக் கூடிய ஞான தண்டத்தில் கொண்டு போய் சேர்க்கிறாள். எமனிடமிருந்து விடுவித்து குருவிடம் கொண்டுபோய் சேர்க்கிறாள். யாரெல்லாம் தண்டம் வைத்திருப்பார்களெனில், முனிவரெல்லாம் வைத்திருப்பார்கள். ஞானிகள், சந்நியாசிகள், யோகிகள் எல்லாரும் குருமார்கள். இவர்களுடைய அதாவது குருமார்களுடைய ஒட்டுமொத்த சொரூபம்தான் சுப்ரமணிய சுவாமி.
இப்போது நாம் கர்மத்திற்கு உட்பட்டிருக்கும்போது எமனுடைய தண்டத்திற்கு பயந்து கொண்டிருக்கிறோம். தண்டநாதா என்கிற மஹாவாராஹி என்ன செய்கிறாளெனில், எமனுடைய தண்டத்திலிருந்து நம்மை விடுவித்து நம்மை குருவினுடைய பாதத்தில் கொண்டுபோய் சேர்க்கிறாள். அப்போது குரு என்ன செய்கிறார் எனில், குரு தன்னுடைய கையில் வைத்திருக்கக் கூடிய ஞான தண்டத்தினால் நம்மை ஆசிர்வாதம் செய்கிறார். அந்த இடத்தில் நமக்கு ஞானம் சித்திக்கின்றது. இதுதான் அம்பாள் செய்யக் கூடிய மிகப் பெரிய செயல்பாடு. இதற்கான கோயிலாக ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரகோசமங்கை எனும் தலத்தில் வாராஹிக்கு தனிக் கோயில் உள்ளது. இது சுயம்பு ஆகும்.
ராமநாதபுரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ளது மிகவும் பழமையான சுயம்பு வாராகி அம்மன் கோவில். உலகின் முதல் சிவாலயம் என்று கருதப்படும் உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலின் காவல் தெய்வம் இந்த வாராகி அம்மன். இந்த இரு கோவில்களும், சதுர்யுகங்களையும் கடந்த பழமையான கோவில்கள் ஆகும். ‘மண் முந்தியதோ, மங்கை முந்தியதோ’ என்ற சொற்றொடர் இத்தலத்தின் தொன்மையினைக் குறிக்கும்.
ஆறடி உயரத்தில் எட்டு திருக்கரங்களுடன் மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தரும் சுயம்பு வாராகி அம்மன், வலது கரம் அபயம் அளிக்க, இடது கரம் வரதம் காட்ட, மற்ற கரங்களில் சங்கு, சக்கரம், ஏர்கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம் தாங்கிட, காளியம்மன் போல வலது காலை குத்த வைத்து, இடது காலை தொங்கவிட்டு உக்கிரமாக அமர்ந்த கோலத்தில் வாராகி அன்னை இருக்கிறாள். அன்னையின் உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு அவளது இடது பக்கம் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார். வாராகி அம்மனுக்கு மஞ்சள் அரைத்து சாத்துவது இந்த கோவிலில் சிறந்த பரிகாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பக்தர்கள் மஞ்சள் அரைத்து சாத்துவதற்கு மஞ்சள் பொடியை பயன்படுத்தக் கூடாது. கோவிலுக்கு வந்து தான் மஞ்சள் கிழங்கை அரைத்து கொடுக்க வேண்டும். இதற்காக கோவில் வளாகத்தில் அம்மி கற்கள் வைக்கப்பட்டு உள்ளன.
(தொடரும்)
The post கர்மாவை யோகமாக மாற்றும் நாமம் appeared first on Dinakaran.