அரைகுறை பணிகளால் சாலைகளில் பள்ளம்: பொதுமக்கள் அவதி

ஈரோடு, ஏப். 18: அரைகுறையாக செய்து முடிக்கப்பட்ட பணிகளால் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் ஊராட்சிக் கோட்டை குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பணிகளுக்காக சாலைகளி பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பணிகள் முடிவடைந்ததும் ஒப்பந்ததாரர்கள் அவற்றை முறையாகவும், முழுமையாகவும், சரியான அளவீடுகளின் படியும் மூடாமல் அரைகுறையாக மூடிவிட்டு சென்றதால் பாதாள சாக்கடை மேன்ஹோல்கள் நடு சாலையில் பள்ளத்துக்குள் சென்றுவிட்டன. இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அதில் இறக்கி ஏற்றிச் செல்லும்போது விபத்துக்குள்ளாகி வருவதுடன், பாதாள சாக்கடை மேன்ஹோல்களும் அடிக்கடி சிதிலமடைந்து வருகின்றன.

மேலும், புதிதாக சாலை அமைத்த பின்னர், மீண்டும் அதில் குடி நீர் இணைப்பு, குழாய் பழுதுகள் போன்ற காரணங்களுக்காக தோண்டப்படும் சாலையை மீண்டும் முறையாக மூடாமல் விட்டுச் சென்றுவிடுவதால் சாலைகளின் நடுவில் குழிகள் ஏற்பட்டும், தார்சாலைகள் குறிப்பிட்ட இடங்களில் பழுதடைந்தும் உள்ளன. இதில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பல்வேறு பணிகளுக்காக தோண்டப்படும் சாலைகளை முறையாகவும், முழுமையாகவும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரைகுறை பணிகளால் சாலைகளில் பள்ளம்: பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: