கோபி,ஏப்.18: கோபி அருகே உள்ள நஞ்சை புளியம்பட்டி பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் பெருமாள்(42). கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான சுரேஷ்(46) என்ற கபடி வீரருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெருமாள் தலையில், அம்மிகல்லை போட்டு சுரேஷ் கொலை செய்ய முயற்சித்துள்ளார்.பெருமாளின் அலறல் சத்தம் கேட்டு அவரது தாயார் மற்றும் மனைவி ஆகியோர் வந்து பார்த்தபோது, பெருமாள் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து பெருமளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் பெருமாள் வீடு திரும்பினார்.
இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை கோபியிலுள்ள சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கொலை முயற்சி வழக்கில் சுரேசுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து சுரேஷ் ஐக்கோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். சுப்ரீம் கோர்ட் தண்டனையை உறுதி செய்த நிலையில் அவரது மனுவை தள்ளுபடி செய்ததுடன், நான்கு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து ஒன்றை ஆண்டுகளாக தலைமுறைவாக இருந்த சுரேஷ் நேற்று கோபியில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் சரண்டைந்தார். அதைத்தொடர்ந்து சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.
The post கொலைமுயற்சி வழக்கில் தலைமறைவு குற்றவாளி கோர்ட்டில் சரண் appeared first on Dinakaran.