தா.பேட்டை, ஏப்.17: திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே கரிகாலி கிராமத்தில் தமிழக அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் பல்வேறு திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளையும், சிமெண்ட் கான்கிரீட் சாலை பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வுசெய்து தரமாகவும், விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கரிகாலி கிராமத்தில் கிளை நூலகத்தினை நேரில் ஆய்வு செய்து நூல்கள் மற்றும் நூலகத்தின் செயல்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தார். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். அப்போது மகிழ மரக்கன்றுகளையும் கலெக்டர் நட்டு வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கரிகாலி கிராமத்தில் பல்வேறு துறைகளில் சார்பில் பொதுமக்களிடமிருந்து 404 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு அதன் தொடர்பான விவரங்களையும் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பதிவு செய்தனர். முன்னதாக இலவச வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணை, தோட்டக்கலைத்துறை சார்பில் சொட்டு நீர் பாசன கருவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காதொலி கருவிகள், கையால் இயக்கக்கூடிய மூன்று சக்கர சைக்கிள், சுகாதாரத்துறை சார்பில் ஊட்டச்சத்து பெட்டகங்கள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்கள்,
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து பெட்டகங்கள், மகளிர் திட்டத்தின் சார்பில் உதவி குழு கடன் உதவிகள், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் புதிய மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட மொத்தம் 159 பயனாளிகளுக்கு ரூ 1 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் பிரதீப்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சுரேஷ், முசிறி ஆர்டிஓ ஆரமுத தேவசேனா, தாசில்தார் லோகநாதன், ஒன்றிய செயலாளர் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் மயில்வாகனன், நிர்வாகி பிரபாகரன், மேட்டுப்பாளையம் பேரூராட்சி தலைவர் சௌந்தரராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் சதீஷ்கிருஷ்ணன், அன்பழகன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post தா.பேட்டை அருகே கரிகாலி கிராமத்தில் 159 பயனாளிகளுக்கு ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.