நெல்லை பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவம்; ‘யூடியூப்’ வீடியோ பார்த்து அரிவாளால் வெட்டி விட்டேன்: கைதான 8ம் வகுப்பு மாணவன் வாக்குமூலம்

நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வஉசி மைதானம் அருகே ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தமிழ் புத்தாண்டு விடுமுறை முடிந்து வழக்கம் போல் வகுப்புகள் தொடங்கிய நிலையில், எட்டாம் வகுப்பில் 2 மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பென்சில் பிரச்னையில் ஒரு மாணவர் புத்தக பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சக மாணவரை வெட்டினார். இதை தடுக்க சென்ற வண்ணார்பேட்டையை சேர்ந்த ரேவதி என்கிற சமூக அறிவியல் பாட ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. காயமடைந்த மாணவரும், பள்ளி ஆசிரியையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் அரிவாளால் வெட்டிய மாணவர், நடந்தே பாளையங்கோட்டை காவல்நிலையம் சென்று போலீசாரிடம் சரண் அடைந்தார்.

அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது மாணவன் போலீசில், ‘யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வன்முறை தொடர்பான வீடியோக்களை பார்த்ததால் தூண்டப்பட்டு, தனது நண்பரை அரிவாளால் வெட்டி விட்டேன். என்னை உடனே சீர்திருத்தப்பள்ளியில் சேருங்கள்’ என்று வாக்குமூலம் அளித்து உள்ளார்.இதைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் மாணவனுக்கு தொடர்ச்சியாக உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த மாணவனை கைது செய்து நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

மாணவர்களின் புத்தக பைகள் சோதனை
அரிவாள் வெட்டு சம்பவத்தை தொடர்ந்து, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பள்ளிக்கு கொண்டு செல்லும் உடமைகளை முற்றிலுமாக சோதனை செய்திட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று காலையில் சம்பவம் நடந்த பாளை பள்ளியில் மாணவர்கள் பள்ளிக்கு நுழையும் முன்பு வரிசையாக நிறுத்தப்பட்டு, அவர்கள் புத்தக பைகள் மற்றும் கொண்டு செல்லும் பொருட்கள் ஒன்று விடாமல் ஆசிரியர்கள் சோதனை நடத்தி உள்ளே அனுமதித்தனர். மேலும் மாணவர்களுக்கு நேற்று காலையில் நல்லொழுக்க போதனைகளும் சொல்லிக் கொடுக்கப்பட்டன. சம்பவத்தை நேரில் கண்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பெற்றோர்களும் அறிவுரை கூறி பள்ளியில் விட்டு சென்றனர். இதேபோல் மற்ற தனியார் பள்ளிகளிலும் மாணவர்களின் புத்தக பைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

The post நெல்லை பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவம்; ‘யூடியூப்’ வீடியோ பார்த்து அரிவாளால் வெட்டி விட்டேன்: கைதான 8ம் வகுப்பு மாணவன் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: