தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ செல்லூர் ராஜு (அதிமுக) பேசுகையில், “மதுரை விளாங்குடி பகுதியில் இருபாலர் கல்லூரி அமைக்க வேண்டும். பல ஆண்டுகளாக நான் கோரி வருகிறேன். கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய உயர்கல்வி அமைச்சர் முதல்வர் முன்னிலையில் கண்டிப்பாக கல்லூரி அமைக்கப்படும் என உறுதி கொடுத்தார். அந்த உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்து உயர்கல்வி துறை அமைச்சர் கோவி செழியன் பேசுகையில், “தற்போது மதுரை மாவட்டத்தில் 3 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 21 அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. விளாங்குடி அருகிலேயே கலை அறிவியல் கல்லூரிகள் இருப்பதால் அந்த பகுதியில் புதிய கல்லூரி திறக்க தேவை எழவில்லை.
உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கூட்டுறவுத்துறை மூலம் அவர் தொகுதியிலேயே ஒரு கல்லூரி திறந்து இருக்கலாமே. ஏன் திறக்கவில்லை” என்றார். தொடர்ந்து செல்லூர் ராஜு பேச முயன்ற போது, சபாநாயகர் அப்பாவு ஒரு கருத்தை தெரிவித்து பேசினார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அடுத்து சபாநாயகர் தான் பேசியதை அவை குறிப்பிலிருந்து நீக்கி விடுகிறேன் என்றார். இதையடுத்து பேசிய அமைச்சர் கோவி செழியன் “ உறுப்பினர் மீண்டும், மீண்டும் ஒரே கோரிக்கை வைப்பதால் இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆராயப்படும்” என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, “நாங்கள் (அதிமுக ஆட்சியில்) செய்யாததால் தானே உங்களை அமர வைத்துள்ளார்கள். உங்களிடம் கல்லூரி வேண்டும் என்று கேட்க வேண்டியுள்ளது” என்றார். இதைக் கேட்டதும் அதிமுக எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்ன இப்படி பேசிவிட்டார் என்று பலர் அவர் இருக்கும் இருக்கையை நோக்கி திரும்பி பார்த்தனர். செல்லூர் ராஜு இருக்கை அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும், செல்லூர் ராஜுவிடம் இப்படியாண்ணா பேசுவது என்ற தொணியில் அவரிடம் ஏதோ கூறினார்.
The post பேரவையில் செல்லூர் ராஜு பேச்சால் அதிமுக எம்எல்ஏக்கள் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.