கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு

சண்டிகர்: நடப்பு சீசன் ஐபிஎல் டி20 தொடரில் இன்று சண்டிகரில் பஞ்சாப் அணி கொல்கத்தாவை எதிர் கொள்கிறது. ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. கடந்த போட்டியில் சன்ரைசர்ஸுடன் தோல்வியை சந்தித்த பஞ்சாப், இன்று தனது சொந்த மைதானமான முலான்பூரில் ஆடுவதால் கூடுதல் தெம்புடன் களமிறங்குகிறது. இந்த மைதானத்தில் நடப்பு சீசனில் நடைபெற்ற 2 போட்டிகளிலும் முதலில் பேட் செய்த அணி 200க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் இன்றைய போட்டியில் பஞ்சாப் முதலில் பேட் செய்து 200 ரன்களுக்கு மேல் குவித்தாலும் கொல்கத்தா அணியில் சுனில் நரேன், ரிங்கு சிங், வெங்கேடஷ் அய்யர், ரகுவன்ஷி உள்ளிட்ட அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் பஞ்சாப் அணிக்கு சிக்கல் தான். இவர்களுடன் கேப்டன் ரஹானே, குயின்டன் டி காக், ஆந்த்ரே ரசல் ஆகியோரும் அதிரடியாக ஆடக்கூடியவர்கள் என்பதால் பஞ்சாப் பவுலர்களுக்கு இன்றைய போட்டியில் வேலை அதிகமாகவே இருக்கும்.

இது ஒருபுறம் இருக்க நடப்பு சீசனில் பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்களில் ஒருவர் கூட 9 ரன்களுக்கு கீழ் வழங்கியது இல்லை. யுவேந்திர சாஹல் மட்டும் 5 ஆட்டங்களில் விளையாடி ஓவருக்கு சராசரியாக 11.13 ரன்களை வாரி வழங்கி 2 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றி உள்ளார்.

ஒருவேளை போட்டிக்கான ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக மாற்றி அமைக்கப்பட்டால் அதுவும் பஞ்சாப் அணிக்கு சிக்கல் தான். ஏனெனில் கொல்கத்தா அணியில் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களான சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி, மொயின் அலி ஆகியோர் உள்ளனர். கொல்கத்தா அணி தனது கடைசி போட்டியில் சிஎஸ்கே அணியை அதன் சொந்த ஊரான சேப்பாக்கத்தில் வீழ்த்தியிருந்தது. கொல்கத்தா அணி 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் அணி கொல்கத்தாவை வீழ்த்த வேண்டுமென்றால் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். 2 அணிகளும் 4வது வெற்றிக்காக போராடும் என்பதால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

 

The post கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: