சென்னை: ஒன்றிய, மாநில அரசுகளின் உறவு மற்றும் சட்ட வரம்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழினத்தை உயர்த்த முடியும் என முதலமைச்சர் கூறியிருந்தார். ஆளுநருக்கு எதிரான வழக்கில் அண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடுவும் நிர்ணயித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.
நீதிமன்ற ஒப்புதலை அடுத்து பல்கலை. மசோதாக்கள் சட்டமானதன் மூலம் துணைவேந்தர் நியமன அதிகாரம் அரசின் வசம் சென்றது. இந்நிலையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வலியுறுத்தும் வகையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர்; தற்போதைய காலகட்டத்தில் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. மாநிலங்களின் உரிமைகள் காக்கப்பட்டால்தான் இந்தியா ஒற்றுமையுடன் இருக்கும். இதனை உணர்ந்தே மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை திமுக முன்னெடுத்துள்ளது
மாநில உரிமையை நிலைநாட்டவே ராஜமன்னார் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. ராஜமன்னார் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் 1974ல் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில பட்டியலில் உள்ளவற்றை பொதுப் பட்டியலுக்கு மடை மாற்றம் செய்யும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவை நீர்த்துப் போக செய்யும் வகையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. நீர் தேர்வு ஒரு சாரருக்கு மட்டுமே பயன்படும். மாநில பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு ஒன்றிய அரசால் மாற்றம் செய்யப்பட்டதால் மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சி; மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க ஒன்றிய அரசு முயற்சி;
கல்விக் கொள்கையில் தமிழ்நாட்டு மாணவர்கள் நலனை மட்டுமே முக்கியமாக கருதுகிறது திமுக அரசு. சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு ரூ.2152 கோடி ஒன்றிய அரசு நிலுவை வைத்துள்ளது. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஜிஎஸ்டி வரி மூலம் மாநிலங்கள் வரிவருவாய் ஈட்டக்கூடிய அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளிடம் இருந்து அதிகாரங்களை பறித்து ஒன்றிய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்படுகின்றன. தமிழ்நாடு செலுத்தும் ஒரு ரூபாய் வரிக்கு 29 பைசாக்கள் மட்டுமே ஒன்றிய அரசு திருப்பித் தருகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாட்டை தண்டிக்கும் வகையில் மக்களவை தொகுதிகள் குறைக்கப்படும் அபாயம் உள்ளது. அனைத்து மாநிலங்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் ஆளுநருக்கு எதிரான வழக்கில் சிறப்பான தீர்ப்பை பெற்றுள்ளோம்.
ஒன்றிய, மாநில அரசுகளின் உறவு மற்றும் சட்ட வரம்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும். குழுவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அசோக்வர்தன் ஷெட்டி, முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் நாகநாதன் இடம்பெறுவர். உயர்நிலை குழு தனது இடைக்கால அறிக்கையை ஜனவரி மாத இறுதிக்குள் வழங்கும். உயர்நிலைக் குழுவின் இறுதி அறிக்கை 2 ஆண்டுக்குள் வழங்கப்படும். அனைத்து மாநிலங்களின் உரிமைகளை காக்கவே உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நிலை குழு தனது இடைக்கால அறிக்கையை ஜனவரி மாத இறுதிக்குள் வழங்கும். மாநிலங்களுக்கான அதிகாரப்பகிர்வை வலியுறுத்தவது தமிழ்நாட்டுக்காக மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்காகவும் தான் என்று கூறினார்.
யார் இந்த நீதிபதி குரியன் ஜோசப்?
2013 முதல் 2018 வரையிலான தனது பணி காலத்தில் 1110 வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார் குரியன் ஜோசப். 2017ல் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 4 நீதிபதிகளில் குரியன் ஜோசப்பும் ஒருவர். தேசிய நீதித்துறை நியமன ஆணைய சட்டத்தை ரத்துசெய்து தீர்ப்பு வழங்கியவர் குரியன் ஜோசப். நீதிபதி நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர கொலீஜியத்தை சீர்திருத்தம் தேவை என்று கூறியவர் குரியன் ஜோசப். முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை தவறு என்று தீர்ப்பு அளித்தவர் நீதிபதி குரியன் ஜோசப்.
The post மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி; மாநில உரிமைகளை மீட்டெடுக்க உயர்மட்டக் குழு: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.