இனி சர்வர் முடங்காது; பத்திரப்பதிவு பணிகளை வேகமாக்க ‘ஸ்டார் 3.0 டெக்னாலஜி’: புதிய தொழில்நுட்பம் விரைவில் அமல்

கோவை: பத்திரப்பதிவு பணிகளை வேகப்படுத்த விரைவில் ‘ஸ்டார் 3.0 டெக்னாலஜி’ திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கோவை, சென்னை, வேலூர், மதுரை உள்ளிட்ட பத்திரப்பதிவு மண்டலங்களில் 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படுகிறது. பத்திரப்பதிவு பணிகள் ஆன்லைன் மயமாக்கப்பட்ட நிலையில் பல்வேறு பகுதியில் சில நேரங்களில் சர்வர் தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பதிவு பணிகளின்போது அதிக ஆவணங்கள், 30 ஆண்டிற்கு மேலான பத்திரங்கள் கையாளப்பட்டு வருகிறது. வில்லங்க சான்று, பத்திர நகல் பெறுவது அதிகமாகி வருகிறது. தற்போது பத்திர பதிவிற்கு ஸ்டார் 2.0 சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது.

பதிவு பணிகளை வேகப்படுத்த தொழில் நுட்பத்தை மேம்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக ஸ்டார் 3.0 என்ற மேம்படுத்தப்பட்ட ‘கிளவுட் கம்யூட்டிங்’ சாப்ட்வேர் தொழில் நுட்பம் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பைலட் புராஜக்ட் துவக்கப்பட்டு பணிகள் நடக்கிறது. விரைவில் இந்த புதிய சாப்ட்வேர் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் பதிவு பணிகள் இப்போதுள்ளதை காட்டிலும் வேகமாக எளிதாக முடியும் என பத்திரப்பதிவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது தினமும் ஒரு பதிவு அலுவலகத்தில் 40 முதல் 100 பத்திரங்கள் பதிவாகிறது. புதிய தொழில் நுட்பம் வந்தால் பதிவுகள் இப்போதுள்ளதை காட்டிலும் ஓரிரு மடங்கு அதிகரிக்க முடியும். வீட்டில் இருந்த படி, ஆன்லைன் மூலமாக பத்திரங்களை பதிவுக்கு தாக்கல் செய்ய முடியும். பதிவுக்கான ஆதார், போட்டோ பதிவுகளையும் பதிவு அலுவலகம் செல்லாமல் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. பதிவு அலுவலகத்தில் பத்திரங்களை பார்த்து ஒப்புதல் வழங்கும் வகையில் ஸ்டார் 3.0 சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 50 ஆண்டு கால ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும், அதற்கான வில்லங்க சான்று எடுக்கவும் பதிவுத்துறை தயாராகி வருகிறது.

பத்திரப்பதிவுத்துறையினர் கூறுகையில், ‘‘கால தாமதம், புரோக்கர் தலையீடு, போலி பத்திரங்கள், முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் புதிய சாப்ட்வேர் தயார் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பதிவு பணியின்போது ஜிபிஎஸ் பதிவுடன் கூடிய போட்டோக்கள் வைக்கப்படுகிறது. புதிய திட்டத்தில் மேலும் சில தொழில் நுட்பங்கள் இடம் பெறும். எந்த வகையிலும் பிழைகள் இல்லாமல் சரியான முறையான வகையில் பத்திரங்கள் பதிவு செய்ய இந்த சாப்ட்வேர் உதவிகரமாக இருக்கும். நவீன சாப்ட்வேர் மூலமாக எந்த நேரத்திலும் சர்வர் முடங்காமல் இருக்க தேவையான ஏற்பாடுகள் நடக்கிறது. பதிவுத்துறையுடன் வருவாய், நில நிர்வாகம், சர்வே போன்ற துறைகளையும் ஒருங்கிணைக்க, ஆதாரங்களை சரிபார்க்க வசதிகள் செய்யப்படும். பட்டா, சிட்டா ஆதாரங்களை உறுதி செய்யவும் வழி வகை செய்யப்படும். புதிய திட்டம் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர்.

The post இனி சர்வர் முடங்காது; பத்திரப்பதிவு பணிகளை வேகமாக்க ‘ஸ்டார் 3.0 டெக்னாலஜி’: புதிய தொழில்நுட்பம் விரைவில் அமல் appeared first on Dinakaran.

Related Stories: