திருவல்லிக்கேணியில் நடந்த வாகன சோதனையின்போது வாலிபரிடம் ரூ.7 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை:சென்னையில் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி இரவு நேரங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் உத்தரவுப்படி போலீசார் பல்லவன் சாலையில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்கில் வந்த வாலிபரை வழிமறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் கட்டுப்பட்டாக ரூ.7 லட்சம் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்திற்கான ஆவணங்களை கேட்ட போது, முறையாக பதிலளிக்கவில்லை.

இதனால், அவரை காவல் நியைத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, நெசப்பாக்கத்தை சேர்ந்த பட்டதாரி வாலிபரான ஷேக் நூருதீன் (27) என்றும், இவர் துபாயில் உள்ள இப்ராமிக் என்பவர் கூறியபடி, மண்ணடி ஈவினிங் பஜாரில் உள்ள ஒரு கடையில் ‘ரகசிய எண்கள்’ கூறி ரூ.10 கொடுத்து சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் இருந்து பணத்தை பெற்று வந்ததும், அந்த பணத்தை துபாயில் உள்ள இப்ராகிம் கூறும் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்வதற்காக, அண்ணாசாலையில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் பறிமுதல் செய்த ரூ.7 லட்சம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், இதுதொடர்பாக பிடிபட்ட ஷேக் நூருதீனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post திருவல்லிக்கேணியில் நடந்த வாகன சோதனையின்போது வாலிபரிடம் ரூ.7 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: