தண்டையார்பேட்டை, ஏப்.12: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ஏறுவதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருவதும் செல்வதுமாக இருப்பதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் நேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது வெடித்து விடும் என்றும் இ-மெயில் மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே நிர்வாகம் ரயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் வரவைத்து சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதனால் அங்கு வந்த ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சோதனை முடிவில் அது புரளி என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து பயணிகள் இயல்பு நிலைக்கு திரும்பினர். மேலும் இந்த இ-மெயிலை யார் அனுப்பியது, எங்கிருந்து அனுப்பினார்கள் என்பது குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
The post சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.