கிருஷ்ணகிரி, ஏப்.12: கிருஷ்ணகிரி -ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்தால் அவதிக்குள்ளாகி வரும் வாகன ஓட்டிகள், இம்மாத இறுதிக்குள் மேலுமலை உயர்மட்ட பாலத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். கிருஷ்ணகிரி -ஓசூர் தேசிய நெடுஞ்சாலையானது இந்தியாவில் அதிக வாகனங்கள் செல்லும் வழித்தடங்களில் 8வது இடத்தில் உள்ள சாலையாகும். இந்த சாலையில் கிருஷ்ணகிரி மட்டுமின்றி தமிழகத்தின் வடமாவட்டங்கள், தென்மாவட்டங்கள் மற்றும் அண்டைய மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் தினசரி பல்வேறு பணி நிமித்தமாக பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் ஓசூரில் உள்ள தொழிற்சாலைகளுக்கும், பெங்களூருவில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கும் தினமும் பேருந்துகளில் மட்டுமல்லாமல், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.
எனவே, எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது. அத்துடன் அடிக்கடி விபத்து நடைபெறும் பகுதியாகவும் உள்ளது. குறிப்பாக இந்த தேசிய நெடுஞ்சாலையினை ஒட்டி ஏராளமான குக்கிராமங்கள் அமைந்துள்ளன. மேலுமலை என்னுமிடத்தில் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி செல்லும் சாலை மிக சரிவாகவும், அதே இடத்தில் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் சாலை மேடாகவும் உள்ளது. இதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது. இதன் காரணமாக உயர் மட்ட மேம்பாலங்கள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, முதல் கட்டமாக கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மேலுமலை, சாமல்பள்ளம், கொல்லப்பள்ளி ஆகிய 4 இடங்களில் மேம்பாலம் கட்டுமான பணிகள் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டன.
இதனால், இந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது- கிருஷ்ணகிரி -ஓசூர் இடையேயான 60 கி.மீ., தூரத்தை கடக்க 2 மணி நேரத்திற்கும் அதிகமாக பிடித்தது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். மேலும், இந்த சாலையில் ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி மோதி விபத்துக்குள்ளாகி வந்தன. இங்கு மேம்பால பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, முதல் கட்டமாக சாமல்பள்ளம் பால பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அடுத்தக்கட்டமாக மேலுமலை பால பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பால பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தார் சாலை அமைக்கும் பணிகள் ஒரு பகுதியில் மட்டும் நடந்து வருகின்றன.
எனவே, விரைந்து இந்த மேம்பால பணியினை முடித்து, போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், மேலுமலை பால பணிகளும் இந்த மாத இறுதிக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, சாமல்பள்ளம் உயர்மட்ட மேம்பாலம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அடுத்தப்படியாக மேலுமலை பாலமும் முடியும் தருவாயில் உள்ளது. அதைத்தொடர்ந்து கொல்லப்பள்ளி, அரசு மருத்துவக்கல்லூரி முன்பு உள்ள பால பணிகளும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
The post மேலுமலை உயர்மட்ட பாலம் திறப்பது எப்போது? appeared first on Dinakaran.
