தஞ்சாவூர், ஏப்10: தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பனகல் கட்டிடம் அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்திற்கு சந்திரபோஸ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் முரளி முன்னிலை வகித்தார். முன்னாள் மாநில செயலாளர் முருகேசன் துவக்க உரையாற்றினார். மாநில பொருளாளர் வெங்கடாஜலபதி, மாநிலத் துணைத் தலைவர் நல்லதம்பி ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்க உரையாற்றினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் பாலாஜி, மாநிலச் செயலாளர் சுரேஷ்குமார் முன்னாள் மாநில துணைத்தலைவர் வின்சென்ட், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமரவேல், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க பொறுப்பாளர் அற்புதராஜ், தமிழ்நாடு கொசு புழு ஒழிப்பு மஸ்தூர் சங்கம் மாவட்ட தலைவர் புண்ணியமூர்த்தி, நடமாடும் மருத்துவ குழு ஊர்தி ஓட்டுனர் சங்கம் பொறுப்பாளர் சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில செயலாளர் கார்த்திக் சிறப்புரை ஆற்றினார். மாநிலத் தலைவர் தில்லை கோவிந்தன் நிறைவுறை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் தனசேகரன் நன்றி உரையாற்றினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சிபிஎஸ் சந்தா இறுதித் தொகை வழங்கக் கோரும் கோப்பு மற்றும் அரசாணையை உரிய திருத்தம் செய்து வெளியிட்டு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமை செயலகத்தில் நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும். கடந்தாண்டு சென்னை எழுலகத்தில் நடைபெற்ற 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் நான்கு மாதத்தில் தீர்வு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக ஒத்துக் கொண்ட வருவாய் ஆணையர் உடனே தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலக உதவியாளருக்கு இணையாக வரையறுக்கப்பட்ட காலமறை ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதில் ஏராளமான சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் 3அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் appeared first on Dinakaran.