3 மையங்களில் நீட் பயிற்சி ; 177 மாணவர்கள் பங்கேற்பு

ஓசூர், ஏப்.10: கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் ஊத்தங்கரையில் அமைக்கப்பட்டுள்ள நீட் பயிற்சி மையத்தில் 177 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் வருகிற மே மாதம் 4 தேதி, இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்களில் சிறந்த பாட வல்லுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையங்களில் தற்போது 177 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நீட் தேர்வு பயிற்சி மையத்தை, கலெக்டர் தினேஷ்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு, பயிற்சி பெற்று வரும் 55 மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். அவர் பேசுகையில், ‘மாணவ, மாணவிகள் பாடத்திட்டங்களையும், கருப்பொருளையும் எளிதாக புரிந்து கொண்டு, தேர்விற்கு தங்களை தயாராக வேண்டும். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள்களை மீண்டும், மீண்டும் படித்து பயிற்சி பெற வேண்டும். பயிற்சிக்கு தேவையான பாட நூல்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும்.

எனவே, நல்ல முறையில் நீட் தேர்வினை எழுதி, வெற்றி பெற்று முதலாம் ஆண்டு சேரும் போது, மருத்துவ மாணவர்களுக்கான வெள்ளை அங்கி வழங்கும் விழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும்,’ என்றார்.
தொடர்ந்து அடிப்படை வசதிகள் மற்றும் தேவையான பயிற்சி நூல்கள் வழங்கும் பணிகள், பயிற்சியாளர்கள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, ஓசூர் சப்கலெக்டர் பிரியங்கா, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குறள்வாசுகி, மாவட்ட நீட் ஒருங்கிணைப்பளார் தீர்த்தகிரி, ஓசூர் மைய நீட் பயிற்சியாளர் ஞானசுந்தரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post 3 மையங்களில் நீட் பயிற்சி ; 177 மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: