கோவை,ஏப்.10: கோவை கோட்டைமேடு ஹாஜி வீதியை சேர்ந்தவர் சலீம்(49). இவரும் தெற்கு உக்கடம் அன்பு நகரை சேர்ந்த ஷேக் அப்துல் காதர்(50) என்பவரும் ஏசி, மோட்டார் ஆகியவற்றை ஆன்லைனில் விற்பனை செய்து வரும் வியாபாரிகளை தொடர்பு கொண்டனர். பின்னர் தாங்கள் நிறுவனம் நடத்தி வருவதாக போலியான பெயர்,ஆவணங்கள் மற்றும் ஜிஎஸ்டி எண்ணை அனுப்பி வியாபாரிகளை நம்ப வைத்து ஆன்லைனில் பொருட்களை வாங்கி லட்சக்கணக்கில் ஏமாற்றியதாக புகார் எழுந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் இருவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனரிடம் பரிந்துரை செய்யப்பட்டது. அதனையேற்று மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சலீம் மற்றும் அப்துல் காதர் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார்.
அதன்படி இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதற்கான உத்தரவு நகல் சிறை போலீசாரிடம் வழங்கப்பட்டது. நடப்பாண்டில் இதுவரை போதை பொருள் வழக்கில் 21 பேர், வழிப்பறி, அடிதடியில் 28 பேர், பாலியல் வழக்கில் 7 பேர், சைபர் கிரைம் குற்றத்தில் 4 பேர் என மொத்தம் 60 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post நடப்பாண்டில் மட்டும் கோவை நகரில் 60 பேர் மீது குண்டர் சட்டம் appeared first on Dinakaran.