முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 28 லட்சம் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சி.வி கணேசன் தகவல்

சென்னை: முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற 07.05.2021 முதல் 28.02.2025 வரையிலான காலத்தில் 27,89,541 தொழிலாளர்களுக்கு ரூ.23,49,17,40,029 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி கணேசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அமைச்சர் மிரளும் தெரிவித்துள்ளதாவது;

தொழிலாளர் நலன்
வரலாற்று சிறப்புமிக்க இந்த மாமன்றத்தில் ஐந்தாவது முறையாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மானியக் கோரிக்கையை தாக்கல் செய்ய நல்ல வாய்ப்பினை வழங்கிய நம்முடைய வணக்கத்திற்குரிய முதல்வர் அவர்களுக்கு என்னுடைய நன்றியை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

“வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கி பாதுகாத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்” என்ற வள்ளுவனின் வாக்கிற்கிணங்க, வாக்கில் இனிமையும், தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிக் காத்திடும் தாயுள்ளம் கொண்டு, மக்களை தன் வசப்படுத்தியவர் தான் நமது முதல்வர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொண்டு என்னுடைய உரையை தொடங்குகிறேன்.

தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் மாநிலம் தமிழ்நாடு. தொழிலாளர் நலன் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு இடையேயான சம நிலையை தொடர்ந்து பாதுகாத்து வருகிறது நமது அரசு.நமது அரசு பொறுப்பேற்றதில் இருந்து தொழில் அமைதியை எப்போதும் பேணிக் காத்து வருகிறது. மாநிலத்தில் தொடர் உற்பத்தியை உறுதி செய்யவும், தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியான வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுத்திடவும் தொழில் அமைதி அவசியமானதாகும்.

தொழிலாளர் நலச் சட்டங்கள், சமரச ஒப்பந்தங்கள், நீதிமன்ற தீர்ப்புகள் ஆகியவற்றை உறுதியாக அமல்படுத்திட வேண்டுமென்பதில், நமது முதல்வரின் அரசு கவனத்துடன் செயலாற்றி வருகிறது. அந்த அடிப்படையில் 49 நிறுவனங்களில் நடைபெற்ற வேலைநிறுத்தங்கள் சமரச அலுவலர்களின் பேச்சுவார்த்தைகளின் மூலம் விலக்கிக்கொள்ளப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 8,373 தொழிற்தாவாக்கள் தீர்த்து வைக்கப்பட்டு, தொழிலாளர் நல அரசாக நமது அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து தொழிலாளர் நலன்களுக்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதுவரை 24 தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் மற்றும் மறு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

பணிக்கொடை
1972-ம் ஆண்டு பணிக்கொடை பட்டுவாடா சட்டத்தின்படி தொழிலாளர்கள் தாக்கல் செய்த 2,368 கேட்பு மனுக்கள் முடிவு செய்யப்பட்டு பணிக்கொடை தொகையாக 16,95,66,342 ரூபாய் வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது.

பணியாளர் இழப்பீடு
“உடுக்கை இழந்தவன் கைபோல” என்ற வள்ளுவனின் கூற்றுக்கிணங்க பணியின்போது ஏற்படும் விபத்துகள் காரணமாக ஏற்படும் ஊனம், இறப்பு ஆகியவற்றால் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அடையும் துயரினை கருத்தில் கொண்டு தொழிலாளர் துறை அலுவலர்கள் பணியாளர் இழப்பீட்டு சட்டங்களின் கீழான வழக்குகளை விரைவாக முடித்து வருகின்றனர். இதன் காரணமாக பணியாளர் இழப்பீட்டு சட்டத்தின் கீழ் 2,119 வழக்குகள் முடிக்கப்பட்டு 89,61,63,241 ரூபாய் இழப்பீட்டு தொகையாக பெற்று தந்த அரசு தளபதி அவர்களின் அரசு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சத்தான உணவு, வாரம் இரண்டு முட்டை என குழந்தைகளின் வயிற்று பசியை போக்கியவர் தலைவர் கலைஞர்.

இதேபோன்று, குழந்தைகளை கல்வியில் ஆர்வம் கொள்ள செய்யும் நோக்கத்துடன், உலகத்தின் முன்னோடி திட்டமாக, காலை உணவு திட்டத்தை கொண்டு வந்த நமது முதல்வர் அவர்களின் உத்தரவின்படி, குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதிலும், கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிப்பதிலும், முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழ்நாடு அரசு.

அனைத்து துறை அலுவலர்களுடன் ஒன்றிணைந்து குழந்தை தொழிலாளர் முறையினை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அமலாக்க அலுவலர்களால் 34,335 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 60 குழந்தை தொழிலாளர்களும், 283 வளரிளம் பருவத் தொழிலாளர்களும், 120 கொத்தடிமைத் தொழிலாளர்களும் மீட்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டிற்குள் குழந்தை தொழிலாளர் முறையினையும் 2030-ஆம் ஆண்டிற்குள் கொத்தடிமை தொழிலாளர் முறையினையும் தமிழ்நாட்டில் அகற்றியே தீர வேண்டும் என்ற நமது முதல்வரின் குறிக்கோளினை நிறைவேற்றுவோம் என்பதனை இம்மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம்
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு வாரியங்களை உருவாக்கியவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் , அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தும் பொருட்டு 1975ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்தினை நிறுவினார். அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் தங்கிப் பயனடையும் வகையில் குறைந்த வாடகையில் குற்றாலம், வால்பாறை மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் விடுமுறை இல்லங்களும், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தங்குவதற்காக சென்னையில் ஜீவா இல்லம் என்ற தங்கும் விடுதியும் செயல்பட்டு வருகிறது.

சட்டமுறை எடையளவுகள் சட்டம்
நுகர்வோர் நலனை பாதுகாக்க எடையளவுகள் சட்டத்தை தொழிலாளர் துறை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. நுகர்வோர்களுக்கு விற்கப்படும் அனைத்து பொருட்களும் தகுந்த எடையிலும், எண்ணிக்கையிலும், அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்கப்படுகிறதா என்பதையும் உறுதி செய்வதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த நிதியாண்டில் மட்டும் 47,769 ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு, 8,063 முரண்பாடுகள் கண்டறியப் பட்டுள்ளன.

இசைவு தீர்வு முறையில் தீர்வு செய்த வகையில், இணக்கக் கட்டணமாக 1,36,41,000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், எடையளவுகள் முத்திரையிட்டதன் மூலம் முத்திரைக் கட்டணமாக ரூபாய் 67.56 கோடியும், எடையளவு உரிமங்கள் மற்றும் புதுப்பித்தல் கட்டணமாக ரூபாய் 31.88 இலட்சமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள்
“கல் பிளந்து மலை பிளந்து கனிகள் வெட்டிக் கருவி எலாம் செய்து தந்த கைதான் யார்கை?
பொன் துகளைக் கடல் முத்தை மணிக் குலத்தைப் போய் எடுக்க அடக்கிய மூச்சு எவரின் மூச்சு?”

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் புகழ் உரைக்கு ஏற்ப உழைக்கும் வர்க்கத்தில் 90 விழுக்காட்டிற்கு மேல் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன்களுக்காக பல்வேறு நலவாரியங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆவார் என்பதை பதிவு செய்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அதே போன்று, “காட்டிலும் மேட்டிலும் களைப்போடு கஷ்டப்படுவார் உழைப்பின்றி வீட்டில் சாதம் வெந்திடுமோ வேறெதுவும் உணவைத் தந்திடுமோ”

என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளுக்கேற்ப உலகை கட்டமைக்கும் உழைப்பாளரின் வாழ்வை கட்டமைப்பதற்காக, நமது முதல்வரின் ஆட்சியில் தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் ஸ்விகி, ஸொமாட்டோ, அமேசான் போன்ற இணையதளம் வாயிலாக பொருட்கள் விநியோகம் மற்றும் சேவைகள் வழங்கும் பணிகளில் ஈடுப்பட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நலவாரியமும் உருவாக்கப்பட்டது.
தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (Gig) நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 2,000 தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (Gig) தொழிலாளர்களுக்கு ரூபாய் 4 கோடி செலவில் புதியதாக e-Scooter வாங்கும் செலவினத்தில் தலா ரூ.20,000/- மானியமாக வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் 1.5 இலட்சம் கிக் தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்துவதுடன், பணிகளுக்கிடையே ஓய்வு எடுக்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வுக் கூடங்கள் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள பெண்கள் / திருநங்கைகள் 1,500 பேருக்கு புதிய ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்கும் செலவினத்தில் ரூ.1 இலட்சம் மானியமாக வழங்க உத்தரவிட்டுள்ளார் நமது முதல்வர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 07.05.2021 முதல் 28.02.2025 வரை 20,26,034 புதிய உறுப்பினர்கள் வாரியங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். 07.05.2021 முதல் 28.02.2025 வரையிலான காலத்தில் 27,89,541 தொழிலாளர்களுக்கு ரூ.2349,17,40,029/- (இரண்டாயிரத்து முன்னூற்று நாற்பத்தொன்பது கோடியே பதினேழு லட்சத்து நாற்பதாயிரத்து இருபத்தொன்பது) மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

பதிவு பெற்ற அமைப்பு சாரா தொழில்களில் 4,37,750 தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1200/- ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் கருதி, தொழிலாளர் ஆணையர் தலைமையில் மாநில அளவிலான புலம்பெயர்ந்த தொழிலாளர் ஆலோசனைக் குழுவும், கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள் தலைமையில் மண்டல அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்களையும் அரசு அமைத்துள்ளது. தமிழ்நாட்டில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்திட இணையவழி தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புத் துறை
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காகவும், தனியார் துறைகளில் வளர்ந்து வரும் மனிதவள தேவைகளை அறிந்து நமது முதல்வர் தனியார் துறையுடன் இணைந்து வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் புதுக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நமது முதல்வர் ஒரு லட்சமாவது இளைஞருக்கு பணிநியமன ஆணையை வழங்கினார். தொடர்ந்து மாநிலக் கல்லுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நமது துணை முதல்வர் ஒரு லட்சத்து ஐம்பதாயிரமாவது பணிநியமன ஆணையை வழங்கினார்கள்.

இதுவரை 309 மெகா வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 2,49,392 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. விரைவில், 2,50,000 ஆவது பணிநியமன ஆணையை நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் வழங்க வேண்டுமென பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

வேலை வாய்ப்புத் துறையில் தன்னார்வ பயிலும் வட்டங்கள் என்ற முன்னோடி திட்டத்தை டாக்டர் கலைஞர் 1999-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் செயல்படுத்தப்பட்டன.

ஒன்றிய அரசின் பணிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெறுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் நுண்திறன் வகுப்பறை (வைஃபை மற்றும் ஸ்மார்ட் போர்டு) வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

இதன் விளைவாக 75,200 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இவர்களில் 6,615 மாணவர்கள் போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் நேரடியாக கலந்து கொள்ள இயலாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தினை இதுவரை 94,48,542 நபர்கள் பார்வையிட்டுள்ளனர்.
பயிற்சித் துறை
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை, ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தவும், அதிக அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கிடவும், முதல்வர் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

இந்த உயரிய இலட்சியத்தை நிறைவேற்ற,
* தரமான பயிற்சி பெற்ற தொழிலாளர்களை தொழிற்சாலைகளுக்கு வழங்கவும்,
* இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு பெற்று தரவும்,
2021-22-ம் ஆண்டு ஒரு தொழிற்பயிற்சி நிலையம்,
2022-23-ம் ஆண்டு 11 தொழிற்பயிற்சி நிலையங்கள்,
2024-25-ல் 13 தொழிற்பயிற்சி நிலையங்கள்,
இந்த நிதி ஆண்டில் 17 தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க அனுமதி என இதுவரை இல்லாத அளவிற்கு
42 தொழிற்பயிற்சி நிலையங்களை உருவாக்கியுள்ளார் நமது முதல்வர் என்பதை இம்மாமன்றத்திற்கு பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

2024-2025 ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 93 சதவீத மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது என்பதையும், கடந்த ஆண்டில் இதுவரை கண்டிராத அளவில் 90.77 சதவீதம் பயிற்சியாளர்கள் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்களுக்கு கடந்த ஆண்டில் நவீன தொழிற்நுட்பங்களில் பல முன்னணி நிறுவனங்களின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. TANSAM, TANCAM, NPTL, WRI, L&T போன்ற முன்னணி நிறுவனங்களில் 664 பயிற்றுநர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயிற்சியாளர்களுக்கு நவீன தொழிற்நுட்பங்கள் பயிற்றுவிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதுடன் பயிற்சியின் தரமும் கூடியுள்ளது.

நமது முதலமைச்சரின் சீரிய முயற்சியால், 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உட்கட்டமைப்பு மற்றும் திறன் கற்பித்தலை மேம்படுத்தும் இலட்சியத் திட்டத்தை, டாடா டெக்னாலஜி உடன் இணைந்து ரூ.2,877/- கோடி செலவில், தொழிற் பயிற்சி நிலையங்கள் 4.0 தரத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டில் நடத்தப்பட்ட அகில இந்திய தொழிற் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த 29 மாணவர்கள் பல்வேறு தொழிற் பிரிவுகளில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். தொழில் 4.0 தரத்திலான தொழிற் பிரிவுகளில் முதல் வருடத்திலேயே 2 மாணவர்கள் இண்டிஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் & டிஜிட்டல் மேனுஃபேக்சரிங் டெக்னீசியன் தொழிற்பிரிவிலும் 2 மாணவர்கள் மேனுஃபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் & ஆட்டோமேஷன் தொழிற் பிரிவிலும் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். இம்மாணவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 24.10.2024 அன்று நேரில் அழைத்து பாராட்டினார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்
1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின்படி, அதிக எண்ணிக்கையில், 52,614 தொழிற்சாலைகள் பதிவு செய்யப்பட்டும், இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் மொத்த பெண் தொழிலாளர்களில், தமிழ்நாட்டின் பங்கு 42 சதவீதம் என்ற அளவிலும், முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதற்கு காரணம், முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அமைதியான தொழிற்சூழல், திறன் மிகுந்த தொழிலாளர்கள், வலுவான கட்டமைப்பை கொண்டுள்ளது. இதனால் வாகன உற்பத்தி, மின்னனு பொறியியல், மருந்து பொருட்கள், ஜவுளி மற்றும் தோல் பொருட்கள் போன்ற துறைகளில் அதிகமான தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளன.

பட்டாசு தொழில்
தமிழ்நாட்டில் 1,578 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலைகளில் 59,477 தொழிலாளர்கள் நேரடியாகவும், சுமார் 3 இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளின் விளைவாக, ஏற்படும் ஒவ்வொரு உயிர் இழப்பின் போதும் நமது முதல்வர் மிகவும் வேதனையடைந்து, தனது வலியை வெளிப்படுத்தி, இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

2024-2025-ஆம் நிதியாண்டில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளுக்கு எதிராக 784 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, 1,37,25,500 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளும் அதிக அபாயகரமான தொழிற்சாலைகள் என வகைப்படுத்தப்பட்டு, முறையான ஆய்வுகளை அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் பண்டிகை காலங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு, மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருக்கும் இணை இயக்குநர்களைக் கொண்டு சிறப்பு குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 2024-2025 ஆம் நிதியாண்டில், தீபாவளி பண்டிகையையொட்டி மேற்கண்ட குழுவினரால் 873 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிவகாசியில் பாதுகாப்பு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, பிரச்சார வாகனம் மூலம் பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமையாளர்களுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேற்கண்ட பயிற்சிகளின் வழியாக 15,799 நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.

கட்டுமானத் தொழிலாளர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பான வழிமுறைகள் குறித்து குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரையிடப்படுகின்றன.
மாநில அளவில் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் தீ மற்றும் தொழிலகப் பாதுகாப்பு குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு துறை அலுவலர்களை கொண்ட இந்த குழுவானது, பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற் சாலைகளில் ஆய்வு மேற்கொள்வதற்கும், ஆய்வு குழுக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் வரையறுத்துள்ளது.

முதலமைச்சர் 10.11.2024 அன்று விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளை ஆய்வு செய்த பின்பு கீழ்கண்டவாறு அறிவிப்பினை வெளியிட்டார்கள்.
“பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் 18 வயது நிறைவுடையும் வரை அவர்களுக்கான பராமரிப்பு செலவுத் தொகைகளை அரசே ஏற்று கொள்ளும்” என அறிவித்தார்.
“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலார் கூற்று போன்று வாடி வருந்தி நிற்கும் குழந்தைகளுக்கு “அன்பெனும் பிடியுள் அடங்கும் மலையாக” நம் முதல்வர், அதற்கான அரசாணை பிறப்பித்து, ரூ.5 கோடி தொகுப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம் (ESI)
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம் என்பது அமைப்புசார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், அவர்களை சார்தோர்களுக்காகவும் செயல்படுகின்ற சமுதாய பாதுகாப்பு திட்டமாகும்.

தமிழ்நாட்டில் 43.77 இலட்சம் தொழிலாளர்களும் மற்றும் 1.75 கோடி தொழிலாளர்களின் குடும்பத்தைச் சார்தோர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 11 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளும், 241 ஈட்டுறுதி மருந்தகங்களும் செயல்படுகின்றன என்பதையும் இம்மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழில் வளர்ச்சியும், உற்பத்தியும், பொருளாதார வளர்ச்சியும் எவ்வளவு முக்கியமோ அதைவிட பன்மடங்கு முக்கியமான உடல் நலமும், மன நலமும் முக்கியம் என்ற அடிப்படையில் முதலமைச்சர் அவர்களின் உத்தரவுபடி, கடந்த நான்கு ஆண்டுகளில் 19 ESI மருந்தகங்கள் புதியதாக தொடங்கப்பட்டுள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
“உலக நாடுகளில் ஆங்காங்கே அரசியல் வேறாயினும்,
உழைப்பு ஒன்றே ஒன்று தான்
உழைப்போர் உலகமும் ஒன்றே ஒன்று தான்
உழைப்பு நல்கி பிழைப்போர் அனைவரும் உடன்பிறப்புகள் தான்
ஒரு தாய் பெற்ற நற்றவப் பிள்ளைகள் தான்”
என, தாய் காவியத்தில் உழைப்பாளிகளை பற்றிக் கூறியவர் முத்தமிழ் அறிஞர்.
இதன் அடிப்படையில் தொழிலாளர் நலன் காக்கும் அரசாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு வீரநடை போட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

The post முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 28 லட்சம் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சி.வி கணேசன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: