ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு திருவண்ணாமலையில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திருவண்ணாமலை : தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக முட்டுக்கட்டை போடும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்து. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது, பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் குறுக்கீடு செய்வது போன்ற ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டது.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது.

அதன்படி, உச்சநீதிமன்றம் தமக்கு அளிக்கப்பட்டு சிறப்பு அதிகாரத்தின் அடிப்படையில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பரபரப்பான உத்தரவுகளை நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று வெளியிட்டது.

அதன்படி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்ததும், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்ததும் சட்ட விரோதம் எனவும், உச்சநீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தின் அடிப்படையில் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிப்பதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பை வரவேற்று திருவண்ணாமலை காந்தி சிலை அருகே நேற்று திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை எம்பி தலைமையில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அப்போது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களாட்சி தத்துவத்துக்கும், ஜனநாயகத்துக்கும் கிடைத்திருக்கும் வெற்றி என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அப்போது, மாநகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், மாவட்ட அமைப்பாளர் டிவிஎம் நேரு, துணை மேயர் சு.ராஜாங்கம், மாவட்ட பிரதிநிதி குட்டி புகழேந்தி, ஏ.ஏ.ஆறுமுகம், இளைஞர் அணி நிர்வாகிகள் எஸ்.கண்ணதாசன், மண்டி பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு திருவண்ணாமலையில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: