உயர்மட்ட மேம்பாலம் கட்டநெடுஞ்சாலைத்துறை ஆய்வு

கிருஷ்ணகிரி, ஏப்.9: கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் பகுதியில், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க, பறக்கும் பாலம் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரியில், ஆவின் மேம்பாலம் அருகில் பெங்களூரு-சென்னை, சேலம்- சென்னை, சேலம்- பெங்களூரு சாலைகள் சந்திக்கும் இடமாக உள்ளது. இதில், சேலம்- பெங்களூரு சாலையில் உயர்மட்ட மேம்பாலம் உள்ளது. ஆனால், சேலம் மற்றும் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு செல்பவர்களும், இதே சாலையில் ஆவின் மேம்பாலத்திற்கு கீழ் செல்லும் நிலை உள்ளது. இதனால் நான்கு புறத்திலிருந்தும் வரும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், நாள்தோறும் விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தவிர்க்க பெங்களூரு, சேலத்திலிருந்து சென்னைக்கு செல்வதற்கு, தனியாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும், சேலம்- பெங்களூரு சாலையில், ஆவின் மேம்பாலத்திற்கு மேல் பறக்கும் மேம்பாலம் போல் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதன் மூலம் சென்னைக்கு சென்று வருவோர், சிரமமின்றி அப்பகுதியை கடக்க முடியும். சேலம்- பெங்களூரு மார்க்கத்தில் செல்பவர்கள் மேம்பாலத்திலும், நகருக்குள் சென்று வருபவர்கள் மேம்பாலத்தின் கீழும் சென்று வர முடியும். இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை டில்லியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து மனு அளித்தார். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஆவின் மேம்பாலத்தில் ஆய்வுகளை துவக்கி உள்ளனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் சேலம், பெங்களூருவிலிருந்து சென்னைக்கு செல்லும் வகையில், உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வினை துவக்கி உள்ளோம். கடந்த சில ஆண்டுக்கு முன்பும், ஆய்வு செய்யப்பட்டு ரூ.1,000 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு செய்து, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. ஆனால், நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது இத்திட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, அதிகாரிகள் குழு ஆய்வை முடித்த பின்பு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். திட்ட மதிப்பீடு கருத்துருவுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உடனடி ஒப்புதல் வழங்கினால், விரைவில் பணிகள் துவங்கும்,’ என்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு பாலம் வந்ததிற்கும், ஒரு விபத்து காரணமாக அமைந்துள்ளது. கிருஷ்ணகிரியில் காட்டு வீர ஆஞ்சநேயர் கோயில் அருகில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி, அன்றைய கிருஷ்ணகிரி கலெக்டர் பூஜா குல்கர்னி சென்ற கார், முன்னால் சென்ற அரசு பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் கலெக்டரின் டபேதார் முனிராஜ் உயிரிழந்தார். கலெக்டர் மற்றும் அவரது நேர்முக உதவியாளர் உள்ளிட்டோர் காயமடைந்தனர். அந்த சம்பவத்திற்கு பின்னரே, அந்த இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. இதே போல், மேலுமலை பகுதியில் 2016ம் ஆண்டு நடந்த விபத்தில், 20 பேர் பலியானதை தொடர்ந்து அங்கு வேகத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மேலும், சாமல்பள்ளம் மற்றும் கொல்லப்பள்ளியில் விபத்து நடக்கும் பகுதிகளில், தற்போது பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

கந்திகுப்பத்தில் கடந்த 3.9.2017ம் தேதி, போட்டி போட்டுக்கொண்டு வந்த 2 கார்கள் சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள், மொபட், சைக்கிள் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால், வன்முறை ஏற்பட்டது. அப்பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடந்தால், தற்போது உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில், கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகிலும் தொடர் விபத்துகள் நடப்பதின் எதிரொலியாக, தற்போது பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வை தொடங்கியுள்ளனர். ஆய்வு பணியை விரைந்து மேற்கொண்டு, பறக்கும் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உயர்மட்ட மேம்பாலம் கட்டநெடுஞ்சாலைத்துறை ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: