நெல்லை டவுனில் பயங்கரம் மாற்று சமூக பெண்ணை காதலித்த வாலிபர் வெட்டி கொன்று புதைப்பு: மூன்று சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

நெல்லை: மாற்று சமூக பெண்ணை காதலித்த வாலிபரை வெட்டி கொலை செய்து புதைத்தது தொடர்பாக 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுன் செபஸ்தியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் மகன் ஆறுமுகம் (எ) அல்லு (22). இவர் நேற்று முன்தினம் காதல் பிரச்னை தொடர்பாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் அவரது உடலை எடுத்துச் சென்று அருகில் உள்ள வயல்காட்டில் புதைத்து விட்டுச் சென்று விட்டனர்.

கொலை நடந்த குருநாதன் கோயில் சாலை, கண்டியப்பேரி விலக்கு பகுதியில் ரத்தக் கறை திட்டு, திட்டாக கிடந்தது. இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின்படி, போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். பல்வேறு இடங்களில் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் சுமார் ஒன்றரை மணி நேரம் தேடினர். கொலை சம்பவம் புரளி என்றும், உண்மை என்றும் இருவேறு தகவல்களால் போலீசார் குழப்பம் அடைந்தனர்.

மதுபோதையே பிரச்னைக்கு காரணம் என அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூற, உஷாரான போலீசார் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மது அருந்திய 3 இளைஞர்களுக்குள் போதையில் தகராறு நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, ரத்தக்கறை படிந்த இடத்தில் இருந்து கொலையுண்ட வாலிபரை கண்டுபிடிக்க முயன்றனர். ஒருவழியாக நேற்று அதிகாலை 1 மணிக்கு மோப்பநாய் உதவியுடன் வாலிபர் புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்டது. போலீசார் பின்னர் தோண்டி பார்த்ததில் கொலையுண்டவர் டவுனைச் சேர்ந்த ஆறுமுகம் (எ) அல்லு என்பது தெரிய வந்தது.

பின்னர் அவரது வீட்டுக்கு தகவல் தெரிவித்த போலீசார், குடும்பத்தினரை வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்ட ஆறுமுகம், மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், அதற்கு பெண்ணின் சகோதரர் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக இப்பிரச்னையை பேசி முடிப்போம் என ஆறுமுகத்தை கொலையாளிகள் தரப்பு டாஸ்மாக் பாருக்கு வரவழைத்துள்ளது.

அங்கு காதல் விஷயத்தில் ஆறுமுகம் உறுதியாக இருந்ததால், அவரிடம் வாக்குவாதம் செய்து, வெளியே கூட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்து, இரவில் அங்குள்ள வயல்வெளியில் புதைத்துவிட்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் டவுன் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் மூன்று பேரையும், அவர்களுக்கு உதவியாக இருந்த சுடலை (எ) சிவா (26) என்பவரையும் கைது செய்தனர். கொலையாளிகளை 4 மணி நேரத்தில் கைது செய்த போலீசாரை போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி பாராட்டினார்.

The post நெல்லை டவுனில் பயங்கரம் மாற்று சமூக பெண்ணை காதலித்த வாலிபர் வெட்டி கொன்று புதைப்பு: மூன்று சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: