சட்டப்பேரவையில் வினா – விடை நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று வினா – விடை நேரத்தின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, குமாராபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இனிக்கோ இருதயராஜ் ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி: பேரவைத் தலைவர் அவர்களே, பூந்தமல்லி தொகுதி, ஆயலூர், அருள்மிகு சுந்தரவல்லி சமேத சுந்தரராஜப்பெருமாள் திருக்கோயிலுக்கு புதியதாக திருத்தேர் செய்ய அரசு ஆவன செய்யுமா?

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்: பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்கள் கோரிய அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் என்பது மிகக் குறுகிய சாலைகளை கொண்ட திருக்கோயிலாகும். ஒருகால பூஜைத் திட்டத்தின் கீழ் பூஜை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இத்திருக்கோயிலை சுற்றி 12 அடி அகலம் கொண்ட சாலைகள் தான் இருக்கின்றது. உறுப்பினர் அவர்கள் திருத்தேர் வேண்டுமென கோரிய பின் ஆய்வினை மேற்கொண்டதில் நூறாண்டுகளுக்கு முன்பு சப்பரத் தேர் பயன்பாட்டில் இருந்ததாக முன்னோர்கள் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. ஆகவே உறுப்பினர் அவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த சாலை வசதிக்கேற்ப ஒரு சப்பரத் தேர் அமைத்து தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி: பேரவை தலைவர் அவர்களே, அமைச்சர் அவர்களுக்கு நன்றி. மதத்தில் புரட்சி செய்த மகான் ராமானுஜருடைய குருநாதர் திருக்கச்சி நம்பிகள் பிறந்த ஊர் பூந்தமல்லி. திருக்கச்சி நம்பிகள் தினந்தோறும் பூந்தமல்லியில் விளையக்கூடிய மலர்களை மாலையாக கட்டி காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய வரதராஜ பெருமாளுக்கு ராமானுஜருடன் சென்று பூஜித்து வருவது வாடிக்கை. சில காலம் வரதராஜ பெருமாளை தரிசிக்க அவர் போகாத காரணத்தினால் அவர் உடல் உபாதையில் இருக்கிறார் என்பதை தெரிந்து வரதராஜ பெருமாளே சூரிய உதயத்தில் திருக்கச்சி நம்பிகளுக்கு காட்சி அளித்தார்கள். அச்சமயத்தில் புஷ்பவல்லி தாயார் மல்லிகை பூவிலிருந்து காட்சியளித்தார். அதனால் பூவிருந்தமல்லி என்று பெயர். அப்படிப்பட்ட அந்த கோயிலுக்கு 69 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திருத்தேர் அமைப்பதற்காக நிதி வழங்கிய மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதே கோயிலில் தாராளமாக நிதி இருக்கிறது. நான்கு ஏக்கர் இடம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருக்கிற காரணத்தினால் அந்த கோயிலுக்கு ஒரு திருமணம் கூடம் கட்டித் தர முடியுமா என்பதை கேட்டு, பூந்தமல்லி ஒன்றியத்தில் அமைந்துள்ள சித்தர்காடு தாத்தீஸ்வரர் சிவன் கோயிலுக்கு குடமுழுக்கு செய்து 14 ஆண்டுகள் ஆகிறது. அதற்கும் குடமுழுக்கு செய்து அந்த கோயில் குளத்தை சீர் செய்து தர முடியுமா என்பதை கேட்டு அமைகிறேன்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்: பேரவை தலைவர் அவர்களே, இத்திருக்கோயிலுக்கு புதிய தேர் உருவாக்கும் பணியினை இந்த மாதத்திற்குள்ளாக நல்ல நாள் குறித்து கொடுத்தால் பணிகளை ஆரம்பிப்பதற்கு சட்டப்பேரவை உறுப்பினரோடு சேர்ந்து நானும் செல்ல தயாராக இருக்கின்றேன். திருக்கச்சி நம்பிகள், ஆண்டாள் இருவரும் பிரசித்தி பெற்ற தெய்வங்கள். அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது இன்றைய ஆன்மீக ஆட்சியினுடைய கடமை. அந்த திருக்கோயிலுக்கு சொந்தமான 4.29 ஏக்கர் நிலம் இருக்கின்றது. திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தை பாதுகாக்கும் வகையில் ரூ.60 லட்சம் செலவில் பாதுகாப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது. அங்கு திருமண மண்டபம் கட்டுவது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மேலான கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அமைத்து தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி: பேரவை தலைவர் அவர்களே, புட்லூர் இராமாபுரத்தில் பூங்காவனத்தம்மன் அங்காளபரமேஸ்வரி கோயில் இருக்கிறது. அந்த கோயிலுக்கு பிள்ளைபேறு கிடைக்க பெறாதவர்கள் அங்கே வேண்டினால் பிள்ளை பேறு கிடைக்கும் என்பது ஐதீகத்தால் லட்சக்கணக்கான பெண்கள் கூடுகின்ற இடம். அப்படி பிள்ளை பேறு கிடைக்கிற நேரத்தில் வளைகாப்பு நிகழ்ச்சிகள் அங்கே ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் நூறிலிருந்து இருந்து 200 பேர் செய்கிறார்கள். அவர்களின் உறவினர்கள் 20,000 பேர்கள் கூடுகிறார்கள். அந்த வளைகாப்பு நிகழ்ச்சி செய்வதற்கு போதிய மண்டபம் இல்லை. தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. எனவே அந்த அடிப்படை வசதி செய்து தர வேண்டும். இந்த மாதம் பங்குனி மாதமாகும். பங்குனி உத்திரத்தில் முருகனை தரிசிக்க பல லட்சம் பேர் பயணிக்கிறார்கள். தைப்பூசம் நாளன்று பழனி ஆண்டவர் கோயிலில் கட்டணமில்லா தரிசனத்தை மூன்று நாட்கள் ஏற்பாடு செய்தார்கள். அதுபோல இந்த பங்குனி உத்திரத்திற்கும் முருகபக்தர்களுக்கு கட்டணமில்லா தரிசனத்தை தருவாரா என்பதைக் கேட்டு அமைகிறேன்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்: பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்கள் கூறிய புட்லூர் பூங்காவனத்தம்மன் திருக்கோயிலுக்கு ஏற்கனவே நடைபாதை அமைப்பதற்கு ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அவர் கூறியது போல் பிரசித்தி பெற்ற அத்திருக்கோயிலுக்கு குழந்தை பாக்கியம் வரம் வேண்டி வருபவர்களுக்கு குழந்தை அருள்வதாக ஒரு ஐதீகம் நம்பிக்கை இருக்கின்றது. ஆகவே அங்கு சீமந்த மண்டபம் ஏற்படுத்தி தரப்படும்.

பங்குனி மாதத்தில் சிவனும், முருகனும் மகிழ்ச்சியோடு எல்லையில்லா ஆனந்தத்தோடு அனைத்து பகுதிகளிலும் உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அவரது கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 10,11 மற்றும் 12 ஆகிய மூன்று நாட்களில் தரிசனம் செய்வதற்கு கட்டண முறை ரத்து செய்யப்படுகின்றது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். பங்குனி உத்திரத்தில் பத்து நாட்கள் நடைபெறுகின்ற திருவிழாக்களில் ஏற்கனவே ஒரு நாளைக்கு பத்தாயிரம் பேர் என்று அன்னதான திட்டத்தை அறிவித்திருந்த முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேர் வீதம் என்று 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் திருக்கோயில் சார்பில் வழங்க உத்தரவிட்டுள்ளார் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். எங்கெல்லாம் இறை பக்தியோடு வருகின்ற பக்தர்கள் பசியோடு இருக்கக் கூடாது என்று பசியையும் போக்குகின்ற அன்னதான பிரபுவாக தமிழக முதல்வர் அவர்கள் பழனி திருக்கோயிலிலும் அன்னதானம் வழங்குவதற்கு உத்தரவிட்டிருக்கின்றார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். .

சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி: பேரவை தலைவர் அவர்களே, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு எங்கள் பகுதியிலிருந்தும், எடப்பாடி பகுதியிலிருந்தும் காவடிகள் சுமந்து நிறைய பக்தர்கள் நடைபயணமாக சென்று கொண்டிருக்கின்றார்கள். சென்னிமலையில் சாலை பணிகள் நடைபெறுகின்ற காரணத்தினால் மேலே விடுவதற்கு அனுமதி இல்லை என்று சொல்லி நேற்று இரவிலிருந்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அமைச்சர் அவர்கள் அந்த இரண்டு நாள் சாலை பணியை நிறுத்தி இன்றும் நாளையும் அங்கே காவடிகளுடன் மேலே சென்று தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிப்பாரா என்பதை கேட்டு அமைகிறேன்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்: பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்கள் ஏற்கனவே வைத்த கோரிக்கைக்கு ஏற்ப ரூ.6.40 கோடி செலவிலே சாலையை அகலப்படுத்துகின்ற பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்னும் ஒன்றரை மாதத்தில் அந்த பணிகள் நிறைவுறும். பங்குனி உற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு அதிக பக்தர்கள் வருகை தருவதால் அந்த சாலை அமைக்கின்ற பணியால் இடையூறு இருக்கிறது என்று தெரிவித்திருக்கின்றார். நான் துறையின் செயலாளரோடு கலந்து பேசி உடனடியாக அந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தகவலை சொல்லி இந்த இரண்டு நாட்களுக்கு அந்த பணிகளை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இனிக்கோ இருதயராஜ்: பேரவை தலைவர் அவர்களே, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் அருள்பாலிக்கும் காமாட்சியம்மன் திருக்கோயிலுக்கும், திருச்சி மேலபுலிவார் ரோடு சுந்தரதாஸ் பகுதியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயிலுக்கும் எங்களுடைய கோரிக்கையை ஏற்று குடமுழுக்கு பணிகளுக்கு உத்தரவிட்டு இன்றைக்கு பணிகள் நடைபெற்று வருவதற்கு அமைச்சர் அவர்களுக்கு நன்றி சொல்லி, ஒரு கால பூஜை திட்டத்தில் இருக்கிற கோயில்களுக்கான தரப்படுகின்ற நிதி போதுமானது அளவில் இல்லை அந்த நிதி உயர்த்தி தரப்படுமா என்பதை கேட்டு அமைகின்றேன்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்: பேரவை தலைவர் அவர்களே, எல்லோருக்கும் எல்லாம் என்ற அரசுக்கு உதாரணமாக கிருத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட உறுப்பினர் இந்து திருக்கோயிலுக்கு நிதியை உயர்த்தி தருவாரா என்று கேட்டிருக்கின்றார். தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒருகால பூஜை திட்டத்தில் இருக்கின்ற திருக்கோயில்களின் மீது அவரது கவனம் திரும்பியதால் அத்திருக்கோயில்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்று இருந்த வைப்பு நிதியை இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கினார். அதோடு மட்டுமல்லாமல் அந்த இரண்டு லட்சம் ரூபாயும் போதாது என்ற காரணத்தினால் தற்போது 2.50 லட்சம் ரூபாயாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் வைப்பு நிதியை உயர்த்தி தந்திருக்கின்றார். அதோடு மட்டுமல்லாமல் 12,959 திருக்கோயில்கள் என்று இருந்து அந்த கோயில்களின் எண்ணிக்கையை 18,000 திருக்கோயில்களாக உயர்த்தியிருக்கின்றார்.

இந்த வகையில் எந்த ஆட்சியிலும் செய்யாத அளவிற்கு அரசினுடைய மானியமாக 310 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கிய பெருமை எங்கள் முதல்வர் அவர்களை சாரும். மேலும், அந்த திருக்கோயிலில் பணியாற்றுகின்ற அர்ச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் எந்த விதமான பணி பாதுகாப்பும் இல்லை, எந்த விதமான ஊதியமும் இல்லை என்பதை அறிந்து முதல்வர் அவர்கள் அனைவரையும் வங்கி கணக்கை தொடங்கச் செய்து மாதம் ஆயிரம் ரூபாயை 18 ஆயிரம் திருக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கும் வழங்குகின்ற ஒரு உன்னத திட்டத்தை ஏற்படுத்தியவர். அதோடு நின்றாரா என்றால் அதோடு நிற்கவில்லை. அந்த திருக்கோயிலிலே பணி புரிகின்ற அர்ச்சகர்களின் பிள்ளைகள் உயர்கல்வி பயில 2023 ஆம் ஆண்டு 400 மாணாக்கர்களுக்கும், 2024 ஆம் ஆண்டு 500 மாணாக்கர்களுக்கும் கல்வி உதவித்தொகையாக தலா ரூ.10,000 பத்தாயிரம் மற்றும் கல்வி உபகரணங்களையும் வழங்கினார். இந்த ஆண்டு சுமார் 600 மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படி அனைத்து வசதிகளையும் செய்து தந்து பாராமுகமாக இருந்த ஒருகால பூஜைத் திட்டத் திருக்கோயில் அர்ச்சகர்களுக்கு தமிழக முதல்வர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு தான் அந்த ஒரு கால பூஜை திட்டத்தில் செயல்படுகின்ற அனைத்து திருக்கோயில்களிலும் இன்றைக்கு ஆண்டவன் மகிழ்ச்சியோடு இருக்கின்றார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்தித்துறை அமைச்சர்: பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர் தங்கமணி அவர்கள் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கான பாதை பற்றி இங்கே குறிப்பிட்டார்கள். அது ஈரோடு மாவட்டமாக இருந்தாலும் காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதி. எனவே என்னுடைய கோரிக்கை ஏற்று முதலமைச்சர் அவர்களும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களும் சாலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கினார்கள். அந்த பணிகள் நடைபெற்று வருகிறது. நானும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஈரோடு அவர்களும் ஆய்வு செய்த பொழுது அதை விரிவு படுத்த வேண்டும் என்று அங்கு ஆலோசனை வழங்கப்பட்டு அந்த பணி விரைவாக நடைபெற்று வருகிறது. அங்கு கல்வெட்டு பணி வருகிற காரணத்தினால் கொஞ்சம் காலதாமதம் ஏற்பட்டது. அந்த பணியும் விரைவில் நடைபெறும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளையும் ஒத்துழைப்பு நல்க சொல்லியதை தொடர்ந்து, அவர்களும் அந்த பணியை மேற்பார்வையிட்டு வருகிறார்கள். பணிகளை விரைந்து முடித்து, அதே நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்: பேரவை தலைவர் அவர்களே, தமிழக முதல்வர் அவர்கள் 6 கோடி 40 லட்ச ரூபாய் செலவில் 4 மீட்டர் அகல சாலையாக இருந்த அந்த சாலையை 6 மீட்டராக அகலப்படுத்தி மேம்படுத்த உத்தரவிட்டிருக்கின்றார். ஒன்றரை மாதங்களில் அந்த பணிகள் நிறைவுறும். மாண்புமிகு உறுப்பினர் தங்கமணி அவர்கள் பங்குனி உற்சவம் நடைபெறுவதால் இரண்டு நாட்கள் அந்த சாலை பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சொல்லி கோரிக்கை வைத்திருக்கின்றார். இதனை முதலமைச்சர் அவர்களின் உடைய கவனத்திற்கு கொண்டு சென்று, எங்கள் துறையின் செயலாளரும் அந்த மாவட்டத்தின் ஆட்சியாளரிடம் கலந்து பேசி இரண்டு நாட்கள் பக்தர்கள் சிரமத்தை போக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் அந்த பணிகள் நிறுத்தப்படும் என்பதை உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சட்டப்பேரவையில் வினா – விடை நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!! appeared first on Dinakaran.

Related Stories: