முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை: போக்குவரத்து துறை எச்சரிக்கை

சென்னை: தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை 8 போக்குவரத்து கழகங்கள் மூலம் தமிழகம் முழுவதும் தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி வருகிறது. நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகிறார்கள். ஆட்டோ, கார்களில் செல்வதை விட மிக, மிக குறைவான கட்டணம், அனைத்து இடங்களுக்கும் சர்வீஸ் போன்ற காரணங்களில் மக்களின் பயன்பாடு அதிகளவு உள்ளது. மேலும் மக்கள் பொதுபோக்குவரத்து சேவைகளை பயண்படுத்துவதை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

மகளிர் விடியல் பயணம், ஆன்லைனில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு, சேவையின் தரத்தை அதிகரிக்க தேவைக்கு ஏற்ப புதிய பேருந்துகள் அறிமுகம் என பல நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஓட்டுநர் மற்றும் நடத்துகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பான அறிக்கையை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பேருந்து பணிமனைகளில் தினசரி இயக்கப்பட வேண்டிய பேருந்துகளுக்கு, ஒரு நாள் முன்னதாக Control Chart – தயார் செய்து ஓட்டுனர் நடத்துனர்களிடம் கையொப்பம் பெற வேண்டும்.

முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர் நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர தேவைகளுக்காக ஒரு நாள் முன்னதாக மாலை 5 மணிக்குள் விடுப்பு தெரிவிக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் பயணம் செய்யும் காலை மற்றும் மாலை நேரங்களான பீக் ஹவர்ஸ் நேரத்தில் இயக்கப்படும் பொதுப்பணி பேருந்துகளை எக்காரணம் கொண்டு சிங்கிள் சிப்ட் ஆக இயக்க படக்கூடாது. முகூர்த்த நாட்களில் அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும், மகளிர் விடியல் பயணம் தொடர்பான சாதாரண கட்டண பேருந்துகள் தினந்தோறும் இயக்கப்படுவதினை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை: போக்குவரத்து துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: