வீட்டிலேயே வைத்து பிரசவம்: 5வது பிரசவத்தில் இளம்பெண் பலி; சித்த வைத்திய கணவன் சிக்கினார்


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே வீட்டில் வைத்து 5வது குழந்தை பிரசவித்த தாய் உரிய சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக இறந்தார். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (38). அவரது மனைவி அஸ்மா (35). சிராஜுதீன் அக்குபஞ்சர் மற்றும் சித்த வைத்தியம் செய்து வருகிறார். சொந்தமாக யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். தற்போது சிராஜுதீன் குடும்பத்துடன் மலப்புரம் மாவட்டம் கோடூர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் அஸ்மா 5வதாக மீண்டும் கர்ப்பிணியானார். முதல் 2 குழந்தைகளும் மருத்துவமனையில் தான் பிறந்தன. அதன் பிறகு பிரசவத்திற்கு மருத்துவமனை செல்ல சிராஜுதீன் அனுமதிக்காததால் வீட்டில் வைத்துத் தான் 2 குழந்தைகளையும் அஸ்மா பிரசவித்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அஸ்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. தொடர்ந்து மாலை சுமார் 6.30 மணியளவில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு அஸ்மாவுக்கு மூச்சுத் திணறலும், ரத்தப்போக்கும் ஏற்பட்டது. உடனே தன்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கணவனிடம் கூறினார். ஆனால் சிராஜுதீன் அதற்கு மறுத்தார். இந்நிலையில் அன்று இரவு 10 மணியளவில் அஸ்மா இறந்தார். அதன் பிறகு மனைவிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறி ஆம்புலன்சை வரவழைத்த சிராஜுதீன், மனைவியின் உடலையும், குழந்தையையும் பெரும்பாவூருக்கு கொண்டு சென்றார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பெரும்பாவூரில் வைத்து அஸ்மாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் அஸ்மாவின் உறவினர்கள் சிராஜுதீனை சரமாரியாக தாக்கினர். மேலும் அவர் மீது போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சிராஜுதீன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரைப் பிடித்து விசாரிக்கின்றனர்.

The post வீட்டிலேயே வைத்து பிரசவம்: 5வது பிரசவத்தில் இளம்பெண் பலி; சித்த வைத்திய கணவன் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: