புதுச்சேரி : வீதிகளில் சிறுவர், சிறுமிகளுடன் ஒன்றாக சேர்ந்து பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தது 1990க்கு முன்பு பிறந்தவர்களுக்கு மறக்க முடியாத நினைவாக இருக்கிறது. பாரம்பரிய விளையாட்டுகள் உடலுக்கு ஆரோக்கியத்தையும், மனதுக்கு மகிழ்ச்சியையும் அளித்தது.
ஆனால் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி, செல்போன் மோகத்தால் பாரம்பரிய விளையாட்டு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. அந்த பாரம்பரிய விளையாட்டுகள் என்னவென்றே இப்போது சிறுவர், சிறுமிகளுக்கு தெரியாது. சிறுவர்கள் செல்போன்களில் கேம் விளையாடியே நேரத்தை கழிக்கும் நிலையுள்ளது. இதனால் குழந்தைகளின் கல்வி கற்கும் திறன், கற்பனை திறன், செயல் திறன் பாதிக்கிறது.
நகரப் பகுதியில் கோடை விடுமுறை காலங்களில் ஏதாவது ஒரு வீதியை தேர்வு செய்து கடந்த 5 ஆண்டுகளாக பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று, புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் `வீதி விளையாட்டு’ என்ற பெயரில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சி காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடத்தப்பட்டது. இதற்காக வாகனங்கள் செல்லாதவாறு தெருவின் இருபுறமும் பேரிகார்டுகள் அமைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.
தெரு மட்டுமின்றி சுற்றுப்புற சிறுவர், சிறுமியர் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று, பம்பரம், பல்லாங்குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம், டயர் ஓட்டம், உடைந்த வளையல், மண்சோறு, உறியடி, 7 கல், கோலி குண்டு, ஓடி புடிச்சி, பச்ச குதிரை, பாட்டி கதை, டயர் ஊஞ்சல், மண் செப்பு சாமான் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டிகளை விளையாடி மகிழ்ந்தனர்.
கொடி, தோரணங்களுடன் ஈஸ்வரன் கோயில் வீதியே நேற்று விழாக்கோலம் பூண்டு இருந்தது. பங்கேற்று விளையாடியவர்களுக்கு தெரு மக்களே பாரம்பரிய உணவு வகைகள், பழச்சாறு, சர்பத் வழங்கி ஊக்கப்படுத்தினர்.
The post புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள் appeared first on Dinakaran.
