ஸ்ரீமுஷ்ணம் அருகே பரபரப்பு கணவருடனான கள்ளக்காதலை கைவிட மறுப்பு அக்காவை கொலை செய்த தங்கை

*உடந்தையாக இருந்த 2 மகன்களும் கைது

ஸ்ரீமுஷ்ணம் : கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா(45). இவரது கணவர் அன்பழகன்(55). இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். தனது 3 பிள்ளைகளோடு சங்கீதா தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கும், இவரது தங்கை சரிதா(40) என்பவரின் கணவர் மேகலைவன்(52) என்பவருக்கும் கடந்த கள்ளக்காதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து தனது கணவரை பலமுறை சரிதா கண்டித்துள்ளார். மேலும் கள்ளக்காதலை கைவிட கூறி தனது அக்காவிடமும் பலமுறை கூறியுள்ளார். இருவரும் கள்ளக்காதலை கைவிட முடியாது என்று கூறி உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சரிதா, அங்கு போவியா என கூறி தனது கணவரின் காலை அடித்து உடைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கையின் கணவர் மேகலைவனை, சங்கீதா அடிக்கடி சென்று சந்தித்து அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார்.

இது மேலும் இருவருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்த இருவரும் சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறத.இதை அறிந்த சரிதா தனது 17 மற்றும் 18 வயது உடைய மகன்களை அழைத்து கொண்டு நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் சங்கீதா வீட்டிற்கு சென்று, வீட்டை விட்டு வெளியே வா என கூச்சல் போட்டுள்ளார்.

இதனால் பயந்து போன சங்கீதா, வீட்டை பூட்டிகொண்டு உள்ளேயே இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரிதா மற்றும் அவரது மகன்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சங்கீதாவை தாக்கியதால் அவர் அலறியுள்ளார்.இதையடுத்து அருகில் கிடந்த புடவையை எடுத்து சங்கீதா கழுத்தில் சுற்றி சரிதா இறுக்கியுள்ளார்.

இதில் மயக்கமடைந்த சங்கீதாவை அங்கேயே போட்டுவிட்டு சரிதா மற்றும் அவரது மகன்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது சங்கீதா மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதை பார்த்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த சோழத்தரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், சேத்தியாத்தோப்பு துணை காவல் கண்காணிப்பாளர் விஜிகுமார் ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இது குறித்து சோழத்தரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சரிதா மற்றும் அவரது 2 மகன்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலை கைவிட மறுத்த அக்காவை தங்கையே புடவையால் கழுத்தை இறுக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஸ்ரீமுஷ்ணம் அருகே பரபரப்பு கணவருடனான கள்ளக்காதலை கைவிட மறுப்பு அக்காவை கொலை செய்த தங்கை appeared first on Dinakaran.

Related Stories: