புதுக்கோட்டை அருகே பயங்கரம் தண்ணீர் பேரலில் அமுக்கி 6 மாத குழந்தை கொலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே தண்ணீர் பேரலில் அமுக்கி 6 மாத குழந்தை கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே குளவாய்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவரது மனைவி லாவண்யா(21). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளாகிறது. 6 மாதத்தில் ஆதிரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரு பைனான்சில் வேலை பார்த்து வரும் மணிகண்டன், அவ்வப்போது விடுமுறைக்கு ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அப்போது தம்பதி இடையே தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் வேலைக்கு சென்ற மணிகண்டன் கடந்த 2 மாதத்துக்கு முன் ஊருக்கு வந்தார். அப்ேபாது தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் கணவருடன் கோபித்துக்கொண்டு லாவண்யா பக்கத்து கிராமமான புலியூரில் உள்ள தந்தை வீட்டுக்கு குழந்தையுடன் வந்துவிட்டார். மணிகண்டன் வீடியோ கால் செய்தால் குழந்தையை மட்டும் காண்பித்துவிட்டு போனை உடனே துண்டித்து விடுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் லாவண்யா நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டிற்கு வெளியில் பாத்ரூம் சென்றபோது மர்ம நபர்கள் இரண்டு பேர், சத்தம் போடாமல் இருக்க அவரது வாயில் துணியை வைத்து அமுக்கியதோடு அவரது கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டும், வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த குழந்தை ஆதிரனை தூக்கிக்கொண்டும் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து லாவண்யா, அவரது தந்தை சுப்பிரமணியன், தாயார் பொன்னரும்பு மற்றும் உறவினர்கள் குழந்தையை தேடியுள்ளனர். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து வீட்டிற்கு வெளியில் உள்ள தண்ணீர் பேரலில் ஆதிரன் சடலமாக மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.  தகவலறிந்து வந்த மணிகண்டனின் தந்தை குமார் மற்றும் தாயார் பேரனை மருமகள் லாவண்யா தான் தண்ணீர் பேரலில் அமுக்கி கொலை செய்து விட்டார் என கதறி அழுதனர். தகவலின்படி கீரனூர் போலீசார் குழந்தையின் தாய் லாவண்யா, அவரது தந்தை சுப்பிரமணியன், தாய் பொன்னரும்பு ஆகிய மூன்று பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் கணவரை பிரிந்து அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வரும் லாவண்யாவே அவரது குழந்தையை கொலை செய்து விட்டு நாடகம் ஆடுகிறாரா அல்லது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள், லாவண்யா கழுத்தில் கிடந்த நகையை பறித்துக்கொண்டு ஆத்திரத்தில் குழந்தையை தண்ணீர் பேரலில் அமுக்கி கொலை செய்து விட்டு சென்றார்களா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

* குழந்தைக்கு ரூ.5 லட்சம் மருத்துவ செலவு
தண்ணீர் பேரலில் மர்மமான முறையில் சடலமாக கிடந்த 6 மாத குழந்தை ஆதிரனுக்கு கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மருந்து கொடுக்கும்போது உடல்நிலை பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து ரூ.5 லட்சத்திற்கு மேல் செலவு செய்து குழந்தையை காப்பாற்றி வீட்டுக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

The post புதுக்கோட்டை அருகே பயங்கரம் தண்ணீர் பேரலில் அமுக்கி 6 மாத குழந்தை கொலை appeared first on Dinakaran.

Related Stories: