மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக கேரளாவை சேர்ந்த எம்.ஏ.பேபி தேர்வு: மதுரையில் நடந்த மாநாடு நிறைவு

மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக கேரளாவைச் சேர்ந்த எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் கடந்த 2ம் தேதி துவங்கி நேற்று வரை நடந்தது. இறுதிநாளான நேற்று நடந்த பொலிட் பீரோ கூட்டத்தில் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும், பொலிட் பீரோ உறுப்பினருமான எம்.ஏ.பேபி (71) கட்சியின் 6வது பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் எம்.ஏ.பேபி பேசியதாவது: மாநாட்டில் 18 அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாநாட்டில் கட்சியின் அரசியல் இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும் இக்கட்டான சூழலில் நாடு உள்ளது. ஆர்எஸ்எஸ், பாஜ, பெரு நிறுவனங்கள் மற்றும் வகுப்பு வாத சக்திகள் கூட்டாக இணைந்து, மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் நாட்டின் அனைத்து செயல்பாடுகளையும் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர்.

24வது அகில இந்திய மாநாடு நாட்டில் ஆட்சியில் உள்ள பாஜவின் நவபாசிச கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்த உறுதி பூண்டுள்ளது. பாஜ அனைத்து துறைகளிலும் ஊடுருவி ஜனநாயகத்தை முடக்கியுள்ளது. ‘எம்புரான்’ படத்தின் மீதான தடையை இதற்கு உதாரணமாக கூறலாம். ஆர்எஸ்எஸ், பாஜ கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள இடதுசாரி கட்சிகள், ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. நாட்டில் ஒருமைப்பாடு, மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்கும் போராட்டத்தில் ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகள் திரள வேண்டுமென மாநாடு அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு பேசினார்.

பேரணி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டின் கடைசி நாளான நேற்று மதுரை ரிங்ரோட்டில் உள்ள மஸ்தான்பட்டியில் பொதுக்கூட்டம் நடந்தது. முன்னதாக பாண்டிகோவில் சாலையிலிருந்து மாநாட்டு திடல் வரை பேரணி நடந்தது. அதில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

The post மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக கேரளாவை சேர்ந்த எம்.ஏ.பேபி தேர்வு: மதுரையில் நடந்த மாநாடு நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: