ரூ.550 கோடியில் கட்டப்பட்ட பாம்பன் புதிய பாலத்தை மோடி திறந்தார்: தாம்பரம் – ராமேஸ்வரம் ரயில் சேவை தொடங்கியது, ரூ.8300 கோடி திட்டங்களுக்கு அடிக்கல்

ராமேஸ்வரம்: ரூ.550 கோடியில் கட்டப்பட்ட பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து, தாம்பரம்-ராமேஸ்வரம் இடையே புதிய ரயில் சேவையை தொடங்கி வைத்தார். 8300 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாட்டில் பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் நூற்றாண்டு கடந்த பழைய பாலத்திற்கு அருகே ரூ.550 கோடி மதிப்பில், 2,078 மீட்டர் நீளம், கடல் மட்டத்திலிருந்து 15.5 மீட்டர் உயரம் கொண்ட புதிய ரயில் பால கட்டுமான பணிகள் கடந்தாண்டு இறுதியில் நிறைவடைந்தது.

333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 இணைப்பு இரும்பு கர்டர்களை கொண்ட இப்பால கட்டுமான பணிகள் நிறைவடைந்த பின் ரயில்வே அதிகாரிகள் பல கட்ட சோதனைகளை நடத்தி, ஏப். 6ம் தேதி (நேற்று) பிரதமர் மோடியால் பாலம் திறந்து வைக்கப்படுமென அறிவித்தனர். இதையடுத்து கடந்த 5 நாட்களாகவே இதற்கான பணிகள் தீவிரமாயின. ராமேஸ்வரத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இலங்கைக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, இவ்விழாவில் பங்கேற்பதற்காக நேற்று இலங்கை அனுராதபுரம் விமான நிலையத்திலிருந்து இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பகல் 12.08 மணிக்கு மண்டபம் ஹெலிபேட் தளத்திற்கு வந்து இறங்கினார்.

பிரதமர் மோடியை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த ஓய்வு அறைக்கு சென்று 30 நிமிடம் பிரதமர் ஓய்வெடுத்தார். அதன் பின்னர் 12.38 மணிக்கு கார் மூலம் பாம்பன் புதிய பாலத்தில் ரயில் சேவை துவக்க நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமான பாம்பன் சாலைப்பாலத்திற்கு சென்றார்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த திறப்பு விழா நிகழ்ச்சி மேடைக்கு வந்த பிரதமருக்கு, ரயில்வே நிர்வாகம் சார்பில் கோடிலிங்க சாஸ்திரிகளின் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்பு பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து, பச்சை கொடியசைத்து தேசியக்கொடியின் மூவர்ணம் பூசப்பட்ட ராமேஸ்வரம் – தாம்பரம் இடையிலான புதிய ரயில் சேவையை துவக்கி வைத்தார். புதிய பாலம் வழியாக இயக்கப்பட்ட இந்த முதல் ரயிலை பைலட் தாமரைச்செல்வன், உதவி பைலட் முருகன் இருவரும் இயக்கினர்.

பாலத்தை ரயில் கடந்ததும், ரிமோட் மூலமாக இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். தூக்குப்பாலம் மேலே உயர்ந்ததும், கால்வாய் வழியாக இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பலில் வீரர்கள் தேசிய கொடியை அசைத்தபடி செல்லும் நிகழ்வை பார்த்து பிரதமர் ேமாடி கையசைத்தார். அதை தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று ராமநவமியை முன்னிட்டு சிறப்பு பூஜையுடன் சுவாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வருகை தந்த மோடிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

முதல் சன்னதியாக ஆஞ்சநேயரை வழிபட்டு ஆத்ம லிங்கத்தை தரிசனம் செய்தார். விநாயகர் சன்னதி முன்பு கோடி தீர்த்தம் தெளித்து கொண்டு வல்லப விநாயகர் மற்றும் முருகரை தரிசனம் செய்த பின், சுவாமி சன்னதி பிரகாரத்திற்குள் சென்று காசி விஸ்வநாதரை தரிசனம் செய்தார். ராமநாத சுவாமிக்கு ராமநவமி சிறப்பு பூஜையும், ருத்ரா அபிஷேகமும் நடைபெற்றது. பிரதமர் வணங்கி வழிபாடு நடத்தினார். அவருக்கு மாலை அணிவித்து தீர்த்த விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்பு பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்து கோயில் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். பிரதமர் வருகையால் நேற்று காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் தரிசனத்தை முடித்து விட்டு பொதுக்கூட்ட மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு, சாலையின் இருபுறமும் கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின் ஆலயம் தங்கும் விடுதி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பிற்பகல் 2.14 மணிக்கு வந்து, 8,300 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாட்டில் பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், எம்.பிக்கள் நவாஸ்கனி, தர்மர், ரயில்வே வாரிய தலைவர் சதீஷ்குமார், பொதுமேலாளர் ஆர்.என்.சிங், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ஏராளமான ரயில்வே முதன்மை அதிகாரிகள் மற்றும் பாஜவினர் கலந்து கொண்டனர்.

மூன்றரை மணிநேர நிகழ்ச்சியை முடித்து கொண்டு மண்டபம் முகாம் ஹெலிபேட் தளத்தில் இருந்து 3.45 மணிக்கு புறப்பட்டு மதுரை விமான நிலையத்துக்கு மாலை 4.40 மணிக்கு சென்றார். அங்கிருந்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் பிரதமர் மோடி தனி விமானம் மூலம் மாலை 5.20 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார்.

* பாம்பன், மதுரையில் கருப்புக்கொடி
பாம்பனில் புதிய ரயில் பாலத் திறப்புவிழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அமைப்பினர் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணாத ஒன்றிய பாஜ அரசை கண்டிப்பதாக கூறி முழக்கமிட்டனர். இதில் கலந்துகொண்ட 22 பேரை போலீசார் கைது செய்து ராமநாதபுரம் அழைத்து சென்றனர்.

இதேபோல மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை பகுதியில் காங். கட்சியினர், பிரதமர் வருகையை கண்டித்து கருப்புக்கொடி காட்டி மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 115 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் நாகப்பட்டினத்தில் இருந்து படகு மூலம் கடல் வழியாக ராமேஸ்வரம் சென்று பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு காட்டமுயன்ற காங்கிரசார் 20 பேரும் கைது செய்யப்பட்டனர்.

* புழுக்கம், தண்ணீரின்றி மாணவர்கள் தவிப்பு
ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி பேசுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு முன்பு பாஜவினர் குறைவான அளவில் கலந்து கொண்டனர். ஆனால் ரயில்வே நிர்வாக பாஜ சங்கத்தினர் அதிகமாக கூடியிருந்தனர். கூட்டத்தை காட்டுவதற்காக கேந்திரிய வித்யாலயா பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

போதிய மின்விசிறி இல்லாதது, வெயிலால் அதிக புழுக்கம், காற்றோட்டம் இல்லாதது, குடிநீர் வசதி செய்து தராததால் சோர்ந்தனர். மேலும், மாணவர்கள், ஆசிரியைகள் மயங்கிய நிலையிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் பேசும்போது, மாணவ, மாணவிகள், பாஜ கட்சியினர் சாரை சாரையாக வெளியே சென்றனர். இதனால் பிரதமரின் எதிரே உள்ள சேர்கள் காலியாக கிடந்தன.

* துவக்க நாளிலேயே தூக்குப்பாலம் பழுது
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, செங்குத்து தூக்குப்பாலத்தையும் திறந்து வைத்து கப்பல் கடந்து செல்வதை பார்வையிட்டார். பிரதமர் திறந்து வைத்துவிட்டு சென்ற சிறிது நேரத்தில் பாலத்தை கடந்த கப்பல் திரும்பி மீண்டும் கடந்து சென்றது.  அதன்பின் உயர்த்திய பாலத்தை இறக்கியபோது, குறிப்பிட்ட சிறிய தூரத்தில் சமநிலை இல்லாமல் ஒருபுறம் ஏற்றம், இறக்கமாக இறங்கியது.

இதனால் பாலத்தில் ஒரு வித சத்தம் எழுந்துள்ளது. இதனை அறிந்த பொறியாளர்கள் மீண்டும் பாலத்தை உயர்த்தி மெதுவாக இறக்கினர். இந்தத் திடீர் பழுதால், பாலத்தை இறக்கி முழுமையாக மூடுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆனது. பிரதமர் மோடி பாலத்தை திறந்து வைத்த சிறிது நேரத்திலேயே செங்குத்து தூக்குப்பாலத்தில் நடந்த பழுது பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ரூ.550 கோடியில் கட்டப்பட்ட பாம்பன் புதிய பாலத்தை மோடி திறந்தார்: தாம்பரம் – ராமேஸ்வரம் ரயில் சேவை தொடங்கியது, ரூ.8300 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: