தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அபாரம் நாட்டிலேயே நம்பர் 1 மாநிலம்: பத்தாண்டுகளில் இல்லாத அளவில் 9.69% புதிய உச்சம், ஒன்றிய அரசின் புள்ளி விவரத்தில் தகவல்

* 2032-33க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய முடியும்

சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் 9.69 சதவீதமாக உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதே நிலை நீடித்தால் 2032-33க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய முடியும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அண்மையில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி குறித்து தரவுகளை வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி விகிதம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று ஒன்றிய அரசின் புள்ளிவிவரத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.

10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இதுவே மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாகும். இதற்கு முன்பு அதிகபட்சமாக 2017-18 நிதியாண்டில் தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.59 சதவீதம் ஆக இருந்தது.  கொரோனா நோய்த்தொற்றால் 2020-21 நிதியாண்டில் தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 0.07 சதவீதம் என்ற மிக குறைவான அளவில் இருந்தது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 2023-24ம் ஆண்டு ரூ.15,71,368 ஆக இருந்து 2024-25ம் ஆண்டு 17,23,698 ஆக உயர்ந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த இடங்களில் ஆந்திரா 8.21 சதவீதம், ராஜஸ்தான் 7.82 சதவீதம், அரியானா 7.55 சதவீதம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. மேலும் குஜராத், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட 14 மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை ஒன்றிய அரசு வெளியிடவில்லை. இதுகுறித்து, சென்னைப் பொருளியியல் நிறுவனத்தின் பொருளாதார வல்லுநர்கள் வெளியிட்ட ஆய்வு கட்டுரைகளில் கூறியிருப்பதாவது:

ஒன்றிய அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பொருளாதார வளர்ச்சி விகிதத்தின் புள்ளிவிவரம், தமிழ்நாடு அரசு முதன்முதலாக மார்ச் 2025 இரண்டாம் வாரத்தில் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் முன்கணிப்பு செய்யப்பட்ட வளர்ச்சி வீதத்துடன் ஒத்துப்போகிறது. இந்த கணக்கெடுப்பு 8 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை கணித்திருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையின்படி, 9.3 சதவீதம் கணிக்கப்பட்டது. ஆனால், ஆண்டின் இறுதியில், இது இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.

சேவைகள் துறையில் மூன்றாம் நிலையில் 12.7 சதவீத வளர்ச்சியும், இரண்டாம் நிலையில் 9 சதவீத வளர்ச்சியும் மாநிலத்தின் செயல்திறனை ஊக்கப்படுத்தியுள்ளது. மாநிலத்தின் மொத்த மதிப்பு கூட்டலில் மூன்றாம் நிலைத் துறையின் பங்களிப்பு சுமார் 53 சதவீதமாகவும், இரண்டாம் நிலை 37 சதவீதமாகவும், முதன்மைத் துறை 10 சதவீதமாகவும் உள்ளது. , குடியிருப்பு மற்றும் தொழில்முறை சேவைகளின் உரிமையை உள்ளடக்கிய ரியல் எஸ்டேட் 13.6 சதவீதம், அதை தொடர்ந்து தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகள் 13 சதவீதம், வர்த்தகம், பழுது நீக்குதல், ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் 11.7 சதவீதம், இவை அனைத்தும் மூன்றாம் நிலை பிரிவுகளில் அடங்கும்.

இரண்டாம் நிலை துறைகளை பொறுத்தவரை, உற்பத்தி மற்றும் கட்டுமானம் முறையே 8 மற்றும் 10.6 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளன. முதன்மை துறையில், பயிர்கள் மற்றும் கால்நடைகள் ஆதிக்கம் செலுத்தும் பிரிவுகள், இவை இரண்டும் சமமாக செயல்பட்டுள்ளன. பயிர்கள் பிரிவில் 5.93சதவீத வளர்ச்சியும், கால்நடைகள் பிரிவில் 3.84 சதவீத வளர்ச்சியும் பதிவாகியுள்ளது. 2021-22 முதல் தமிழ்நாடு தொடர்ந்து 8 சதவீதம் அல்லது அதற்கு மேல் அதிகரித்து வருகிறது.

வரும் ஆண்டுகளில் இதே 9.7 சதவீதத்தை தக்க வைத்துக் கொண்டால், வலுவான ஏற்றுமதிகளுடன், இது 2032-33க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும், அனைத்து துறைகளும் 2024-25ம் ஆண்டில் செய்ததை விட 0.5 சதவீத புள்ளிகள் அதிகமாக வளர்ந்தால், 2025-26ம் ஆண்டில் மாநிலத்தின் வளர்ச்சி 10.7 சதவீதமாக இருக்கும். 2025-26ம் ஆண்டில் 14.5 சதவீத பெயரளவு வளர்ச்சியை நிதிநிலை அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

* சமமான வளர்ச்சியே காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: 9.69 சதவீதம் வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதுவும் பாலின சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்த சாதனையை நாம் எட்டியுள்ளோம்.

அடிப்படைகளில் உறுதி, நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கு ஆகியவற்றை கொண்டு நம் மாநிலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை திராவிட மாடல் வடிவமைத்து வருகிறது. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் இலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம்.

The post தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அபாரம் நாட்டிலேயே நம்பர் 1 மாநிலம்: பத்தாண்டுகளில் இல்லாத அளவில் 9.69% புதிய உச்சம், ஒன்றிய அரசின் புள்ளி விவரத்தில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: