ஏற்காடு மலைப்பாதையில் ஆபத்தான 20 வளைவுகளில் ரப்பர் ரோலர் தடுப்பு அமைப்பு: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

சேலம், ஏப்.4: ஏற்காட்டில் நடப்பாண்டு கோடை விழாவை முன்னிட்டு, ஏற்காடு மலைப்பாதையில் விபத்தை தடுக்க 20 ஆபத்தான வளைவுகளில் ரப்பர் ரோலர் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

மலைகளின் அரசன் என்று அழைக்கப்படுவது ஏற்காடு. இங்கு தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும், இதைதவிர கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஏற்காட்டில் படகு இல்லம், ஏரி பூங்கா, மான் பூங்கா, அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஐந்திணை பூங்கா, தாவரவியல் பூங்கா, பக்கோடா பாய்ண்ட், சேர்வராயன் கோயில், தலைச்சோலை சிவன் கோயில் உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களாகும்.

இந்த நிலையில் ஏற்காடு மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் வாகனங்கள் திரும்பும்போது சில நேரங்களில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த விபத்துக்குள்ளாகி வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு ஏப்ரலில் ஏற்காடு பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு தனியார் பஸ் ஒன்று 13வது கொண்டை ஊசி வளைவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மாதத்திற்கு இரண்டு, மூன்று விபத்துக்கள் ஏற்படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 50க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடக்கிறது. இந்த விபத்துக்களில் அதிகமாக சிக்குவது இருசக்கர வாகனங்கள் தான். மலைப்பாதையில் விபத்தை குறைக்கும் வகையில் ரப்பர் ரோலர் தடுப்புகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.

இதுபோன்ற ரப்பர் ரோலர் தடுப்புகள் ஊட்டி, கொடைக்கானல் உள்பட பல மலை ஸ்தலங்களில் அமைக்கப்பட்டுள்ளது. ரப்பர் ரோலர் தடுப்புகள் அமைக்கப்பட்ட இடங்களில் விபத்துக்கள் கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோன்று ஏற்காடு மலைப்பாதையில் விபத்தை குறைக்கும் வகையில் ரப்பர் ரோலர் தடுப்புகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஐந்து மாதமாக ஏற்காடு மலைப்பாதையில் ஆபத்தான வளைவு, அதிக விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து 20க்கும் மேற்பட்ட இடங்களில் ரப்பர் ரோலர் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏற்காடு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், பண்டிகை காலங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஏற்காடு மலைப்பாதையை பொருத்தமட்டில் 20 கொண்டை ஊசி வளைவு மற்றும் ஏராளமான வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் எதிர்பாராதவிதமாக சில வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றன. சில நேரங்களில் வேகமாகவோ அல்லது கவனக்குறைவால் வளைவில் வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்கிறது.

இந்த நிலையில் வரும் மே மாதத்தில் ஏற்காட்டில் கோடை விழா நடக்கவுள்ளது. இந்த கோடை விழாவை காண தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரவாய்ப்புள்ளது. மலைப்பாதையில் விபத்தை தடுக்கும் வகையில், ரப்பர் ரோலர் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 இடங்களில் ரப்பர் ரோலர் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரப்பர் ரோலர் தடுப்பானது, வளைவில் வாகனம் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக சாயும் நிலை ஏற்பட்டால், வேகத்தை குறைக்கும். ரப்பர் ரோலர் அந்த வாகனத்தை சாய்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளும். ரப்பர் ரோலர் தடுப்பு மூலம் 90 சதவீதம் விபத்துக்களை குறைத்துவிடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஏற்காடு மலைப்பாதையில் ஆபத்தான 20 வளைவுகளில் ரப்பர் ரோலர் தடுப்பு அமைப்பு: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: