பாடாலூர், ஏப்.4: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வருகிற ஏப்ரல் 11ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் மலை மீது தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இது பக்தர்களால் பெருமையோடு வடபழனி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழா நேற்றுமுன்தினம் மாலை விநாயகர் வழிபாடு வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது.
நேற்று காலை 5.45 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. முன்னதாக, மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மேலும் கொடி மரத்திற்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்களின் \”அரோகரா அரோகரா\” கோஷத்துடன் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றப்பட்டது. விழாவில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், இரூர், பாடாலூர், குரூர், சிறுவயலூர், நக்கசேலம், மங்கூன், பொம்மனப்பாடி, சத்திரமனை, மாவிலிங்கை உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருக்கோயில் பணியாளர்கள், கிராம பொதுமக்கள், உபயதாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தினமும் இரவு தண்டாயுதபாணி சாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சுவாமி திருவீதி உலா நடைபெறும். வருகிற 9ம் தேதி (புதன்கிழமை) திருக்கல்யாணம் உற்சவம், ஏப்.10ம் தேதி (வியாழக்கிழமை) இரவு வெள்ளி மயில், குதிரை வாகனத்திலும், அலங்காரப் பல்லக்கிலும் சுவாமிகள் திருவீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.45 மணிக்கு திருத்தேரோட்டம் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 12ம் தேதி மாலை 6 மணிக்கு தேர் நிலைக்கு வந்தடைகின்றன.
The post செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.