சேலம், ஏப். 3: சேலம்-ஏற்காடு, குப்பனூர்-ஏற்காடு சாலையில் ஓராண்டிற்கான சுங்க கட்டண வசூல் உரிமம் ₹90.15 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. ஏற்காட்டிற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஏற்காட்டில் வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு ஏற்காடு பிரதான மலைப்பாதையிலும், குப்பனூர் சாலையிலும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கான ஏலம், ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
அதன்படி, 2025-2026ம் ஆண்டுக்கான சுங்க கட்டண உரிமத்திற்கான ஏலம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, முன்னிலை வகித்து ஏலத்தை நடத்தினார். முதலில் சேலம்-ஏற்காடு சாலைக்கான ஏலம் நடந்தது. இதில், 9 பேர் கலந்து கொண்டனர். முடிவில், சேலத்தை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர், ₹70.10 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். இதனை தொடர்ந்து, குப்பனூர்-ஏற்காடு சாலை தனியாக ஏலம் நடத்தப்பட்டது. இதில், 15 பேர் கலந்து கொண்டு ஒப்பந்தபுள்ளி கோரியிருந்தனர். இதிலும் சேலத்தை சேர்ந்த கமலக்கண்ணன், ₹20.05 லட்சத்திற்கு ஏலத்தை கைப்பற்றினார். தொடர்ந்து இதற்கான ஒப்பந்த விவரங்கள் அவருக்கு வழங்கப்பட்டது.
முன்னதாக, ஏலத்தை முன்னிட்டு 100க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். அவர்கள் அனைவரும் ஏலம் நடந்த அறைக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த டவுன் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. நடப்பாண்டில் டூவீலர்களுக்கு சுங்க கட்டணத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பேருந்து, டிரக்ஸ், லாரிக்கு ₹100, மினி லாரி, டெம்போ மற்றும் மேக்ஸி கேப்க்கு ₹80, இலகுரக வாகனங்கள், சுற்றுலா பயணிகள் கார், டாக்சிக்கு ₹50, மூன்று சக்கர வாகனங்களுக்கு ₹25 என சங்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
The post சேலம்-ஏற்காடு, குப்பனூர்-ஏற்காடு சாலையில் சுங்ககட்டண வசூல் உரிமம் ரூ.90.15 லட்சத்திற்கு ஏலம்: கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது appeared first on Dinakaran.