ஆட்டிசம் குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளருக்கு விழிப்புணர்வு

சேலம், ஏப். 3: சேலம் மாவட்டத்தில் ஆட்டிசம் குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு தலைமை வகித்து, மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது:
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, ஆட்டிசம் என்றால் என்ன, குழந்தைகளுக்கு ஏற்படும் ஆட்டிசத்தின் ஆரம்பநிலை அறிகுறிகள், அதை எவ்வாறு கண்டறிவது போன்ற முக்கியமான தகவல்களை எடுத்துச் செல்ல விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளை, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தேவையான ஆற்றல்கள் இல்லாமை, பிறருடன் தொடர்பு கொள்ளும் ஆற்றல்கள் இல்லாதது மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் இல்லாமல் இருத்தல் போன்றவற்றைக் கொண்டு கண்டறிய முடியும்.

இந்த அறிகுறிகளை குழந்தைகளின் 5 வயதில் கண்டுபிடிப்பது எளிது. ஆனால் 2 அல்லது 3 வயதிலே அறிகுறிகளை கண்டுபிடித்தால் ஆட்டிசத்திற்கான சிகிச்சை முன்னதாகவே தொடங்க ஏதுவாகவும், பேச்சு சிகிச்சையை தொடங்கவும் முடியும். சேலம் மாவட்டத்தில் ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதன்மூலம் பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளில் இந்த பிரச்சனைகள் இருந்தால் முன்னதாகவே கண்டறிந்து, மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) நந்தினி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) சவுண்டம்மாள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், மனநல அலுவலர் விவேகானந்தன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீமுரளி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆட்டிசம் குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளருக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: