சேலம், ஏப்.3: சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 1.10லட்சம் விவசாயிகளுக்கு ₹1,042 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இலக்கை விட கூடுதலாக பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர்க்கடன்கள் வழங்கப்படுகின்றன. கடன் பெற்ற தேதியில் இருந்து, குறித்த காலத்திற்குள் கடனை முழுமையாக திருப்பி செலுத்துவோருக்கு வட்டி முழுதும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள், தங்களின் தேவைக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர்.
கடன் வாங்கியவர்களே தொடர்ந்து வாங்கி வருகின்றனர். எனவே, புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்த்து, அவர்களுக்கு கடன் வழங்க முன்னுரிமை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை அறிவுறுத்தியது. சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 203 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 5 பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் 1.10லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ₹1,042 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதில், 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களுக்கு ₹62 கோடிக்கு மேல் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் பயிர்க்கடன் விவசாயிகளுக்கு ₹1,007 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இலக்கை விட கூடுதலாக ₹1,042 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. 1.10லட்சம் விவசாயிகள் பயன்பெற்றனர். அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நில உடைமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக விஏஓ அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்புகொண்டு கடன் மனு சமர்ப்பித்து, பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் இலக்கைவிட கூடுதலாக பயிர்க்கடன் ₹1,042 கோடி வழங்கப்பட்டுள்ளது. 1.10லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
7 ஆயிரம் புதிய உறுப்பினர்களுக்கு ₹62 கோடிக்கு மேல் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று ₹110 பங்குத் தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி, உடன் உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து, அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம். கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை கூட்டுறவு சங்கங்களில் பெற்று பயனடையலாம்.
இவை தவிர கூட்டுறவு சங்கங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மற்றும் குறைந்த வட்டியில் சுயஉதவிக்குழு கடன், நகைக்கடன், மத்திய காலக்கடன், பண்ணைசாராக்கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு குறைந்த வட்டியில் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற 17வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி, அந்தந்த கடனுக்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் அனைத்து விதமான கடன்களையும் பெற்று பயனடையலாம்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
The post மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 1.10 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,042 கோடி பயிர்க்கடன்: அனைத்து நிலைகளிலும் பயன்பெற அழைப்பு appeared first on Dinakaran.