கொத்து, கொத்தாக காய்த்து தொங்கும் மாங்காய்கள்

சேந்தமங்கலம், ஏப்.3: சேந்தமங்கலம் வட்டார பகுதியில் மாங்காய் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேந்தமங்கலம் வட்டார பகுதியான காரவள்ளி, வெண்டாங்கி, புளியங்காடு, சின்னப்பள்ளம் பாறை, பெரிய பள்ளம்பாறை, நடுக்கோம்பை, வாழவந்தி கோம்பை உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா மரங்கள் உள்ளது. கொல்லிமலை அடிவாரப் பகுதி என்பதால், இங்கு விளையும் கிளிமூக்கு, செந்தூரா, பங்கனப்பள்ளி, இமாம்பசந்த், நீலம், சேலம் குண்டு, பெங்களூரா உள்ளிட்ட ரகங்கள் பெரியதாகவும், நல்ல சுவையுடனும் இருப்பதால் வெளியூர் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல்கின்றனர். மாந்தோப்புகளை ஏக்கர் கணக்கில் வியாபாரிகளுக்கு ஆண்டு குத்தகைக்கு விட்டு விடுகின்றனர். சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், அப்பகுதிகளில் மண்டி அமைத்து விவசாயிகளிடம் நேரடியாக மாங்காய்களை வாங்கி வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு மா மரங்களில் பூ வைத்தவுடன், சரியான பருவத்தில் உதிராமல் இருக்க மருந்துகள் அடித்திருந்தனர். இதனால், பூக்கள் உதிராமல் அப்படியே பிஞ்சுகளாக மாறி, காய்ப்புக்கு வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுற்றுப்புற பகுதியில், தொடர்ந்து மூன்று நாட்கள் பலத்த மழை பெய்ததால் மாங்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த ஆண்டு நல்ல மழை பெய்து, சரியான தருணத்தில் மா மரங்களில் பூக்கள் விட்டது. தொடர்ந்து பூக்கள் உதிராமல் இருக்க, மருந்துகள் அடிக்கப்பட்டதால், பூக்கள் உதிராமல் மாம்பிஞ்சுகளாக மாறிவிட்டது. நல்ல மழை பெய்ததால் பிஞ்சுகளும் அதிகளவில் உதிரவில்லை. இந்த ஆண்டு மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது என்றனர்.

The post கொத்து, கொத்தாக காய்த்து தொங்கும் மாங்காய்கள் appeared first on Dinakaran.

Related Stories: